ரோகித் இந்த 5 தவறுகளை சரி செய்தாகணும்… இல்லையென்றால் வெற்றிக்கு வாய்ப்பில்லை

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இப்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலையில் அந்த அணியை எதிர்கொண்டிருக்கிறது. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதற்கும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிக் கொண்டிருப்பதற்கும் ரோகித் சர்மாவிடம் 5 தவறுகளே காரணம் என அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது. 

ரோகித் சர்மா பேட்டிங்

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா டெஸ்ட் வடிவத்தில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்ந்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 12.80 ஆக குறைந்துள்ளது. முன்னணி பேட்ஸ்மேன் ஒருவரின் ஆட்டம் நிச்சயமாக அணியை நேரடியாக பாதிக்கும் என்பதால் ரோகித் சர்மா முதலில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும். ஒருநாள் மற்றும் 20 ஓவர் பார்மேட்டில் ஆடுவதுபோலவே ஆடாமல் நீண்ட நேரம் களத்தில் இருக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் அவரிடம் அப்படியான அணுகுமுறை ஏதும் இல்லை. இதனை ரோகித் சரி செய்ய வேண்டும். 

சரியான அணியை தேர்ந்தெடுத்தல்

தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு மைதானத்தில் ஆடும்போது அந்த மைதானங்களில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்களை கொண்டு விளையாடுவது புத்திசாலித்தனம். ஆனால் இதில் ரோகித்சர்மா கோட்டைவிடுகிறார். பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் எதிர்பார்த்த அளவுக்கு இந்த தொடரில் விளையாடவில்லை. அதேபோல் ஸ்ரேயாஸ் சில மணி நேரங்களில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார். 

சுழற்பந்து வீச்சாளர்களை எடுக்கலாம்

பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணாவை நீக்கிவிட்டு தரமான சுழற்பந்துவீச்சாளர் அல்லது ஆல்ரவுண்டர்களுக்கு இடம் கொடுக்கலாம். தாக்கூரை ஆல்ரவுண்டராக நினைத்தால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாதபோது அவரை சுற்றியே இந்திய அணி ஏன் இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற இந்தியாவில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். பியேளர்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்போது, தாக்கூரை மட்டுமே இந்திய அணி நம்பியிருப்பதுபோல் இருக்கிறது. 

பந்துவீச்சாளர் மாற்றத்தில் அணுகுமுறை

மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் மாற்றத்தில் ரோகித் சர்மா கோட்டைவிடுகிறார். சரியான முறையில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா அணிக்கு அழுத்தம் கொடுக்க தவறுகிறார். வேகபந்துவீச்சில் இந்தியா திணறும் அதேவேளையில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். அதற்கு காரணம் ஒரே நேரத்தில் தரமான பந்துவீச்சாளர்களை சீக்கிரம் பயன்படுத்திவிடுவது தான். சுழற்சி முறையில் அவர்களை நீண்ட ஸ்பெல் வீச வைக்க மறுக்கிறார். இதனையும் சரி செய்ய வேண்டும். 

களத்தில் ஆக்ரோஷம்

இந்திய அணியிடம் களத்தில் ஆக்ரோஷம் என்பதை பார்க்கவே முடிவதில்லை. ஏதோ பொழுதுபோக்காக விளையாடிக் கொண்டிருப்பதைபோல் பிளேயர்களின் அணுகுமுறை இருக்கிறது. தொழில்முறை ஆட்டக்காரர்கள் என்ற உணர்வை இந்திய வீரர்களிடம் தென்னாப்பிரிக்க மைதானத்தில் பார்க்க முடியவில்லை. இப்படி இருக்கும்போது தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துவதை பற்றி கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்க முடியும். ஒருவேளை வெற்றி பெற விரும்பினால் இந்திய அணியும், ரோகித் சர்மாவும் இந்த தவறுகளை கட்டாயம் களைய வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.