IND vs AFG: முதல் டி20யில் விராட் கோலி விளையாட மாட்டார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

India vs Afghanistan: இந்தியா vs ஆப்கானிஸ்தான் இடையேயான டி10 தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  காரணம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக விளையாடினர். அந்த தொடரில் இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அதன் பின்னர் அவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் இந்த கடைசி டி20ஐ தொடருக்காக, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இருவரையும் திரும்ப அழைத்துள்ளது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலி வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20யில் விளையாட மாட்டார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டி20 ஐ இழக்க நேரிடும் என்றும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளுக்கு விராட் கோலி இருப்பார் என்றும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவார்கள் என்றும் கூறினார்.  விராட் கோலி 115 டி20 போட்டிகளில் விளையாடி 52.73 சராசரியுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக்-ரேட் 137.96 ஆகும்.  விராட் கோலி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 67 ரன்களை எடுத்த போது வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 2000 ரன்களை எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்தார்.  இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 (2735 ரன்கள்) மற்றும் 2019 (2455 ரன்கள்) ஆகிய ஆண்டுகளில் இந்த சாதனையை அவர் செய்திருந்தார்.

மொஹாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில், ரோஹித் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓபன் செய்யவுள்ளதால் ஷுப்மான் கில் 3-வது இடத்தில் பேட் செய்வார்.  சூர்யகுமார் யாதவ் இல்லாத நிலையில் திலக் வர்மா நான்காவது இடத்தைப் பெற உள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்தியாவுக்கு ஆறாவது பந்துவீச்சு விருப்பத்தையும் அவர் வழங்குவார். ரிங்கு சிங் ஐந்தாவது இடத்தில் விளையாடுவார். இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா உள்ளார்.  மேலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே எடுத்துள்ளது. அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான் ஆகிய மூவரும் பிளேயிங் XIல் இருக்க கூடும். அக்சர் படேல் கண்டிப்பாக இடம் பெறவுள்ள நிலையில், சுந்தர், ரவி பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் இடையேயான கடுமையான போட்டி நிலவக்கூடும்.  

முதல் டி20 போட்டிக்கான இந்தியாவின் கணிக்கப்பட்ட XI: ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், மற்றும் அவேஷ் கான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.