இஷான் கிஷனின் இந்திய அணி பயணம் முடிவடைகிறதா? டிராவிட் பேச்சையும் கேட்கவில்லை

இந்தியாவின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவரின் இந்த விலகல் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த இஷான், தொடர்ந்து அணியில் பல்வேறு சீரிஸ்களில் இடம்பிடித்தார். ஆனால், அவருக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு சில சமயங்களில் மட்டுமே கிடைத்தது. இதனால் இஷான் கிஷன் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து தாமாக விலகினார். அவர் மன சோர்வின் காரணமாக விலகி இருப்பதாக பிசிசிஐ தெரிவித்தது. அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறுவார் என கூறப்பட்ட நிலையில் அதுவும் சந்தேகமாக மாறி உள்ளது. இஷான் கிஷன் இந்திய அணியில் இருந்து விலகியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது, அவர் ராகுல் டிராவிட்டின் அறிவுரைகளை பின்பற்றவில்லை என்பது தான். 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முந்தைய இந்தியா ஏ பயிற்சிப் போட்டிகளில் இருந்து இஷான் கிஷன் விலகிய நிலையில், அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் முன் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என இந்திய அணி சார்பில் கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து பேசும்போது, இஷான் கிஷன் உள்ளூர் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடினால் இந்திய அணியில் நிச்சயம் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். 

ஆனால், இஷான் கிஷன் இதுவரை அதை செய்யவில்லை. இது இந்திய அணி நிர்வாகத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இஷான் கிஷன் மன உளைச்சலுக்கு ஓய்வு எடுத்தாலும் தோனியுடன் பார்ட்டியில் ஈடுபட்டதற்காகவும் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் கோபமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துளது. 

இதுஒருபுறம் இருக்க, இஷான் கிஷன் தனக்கு தொடர்ந்து அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மனமுடைந்து இவ்வாறு நடந்து கொள்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இஷான் கிஷன் ஒரு திறமையான வீரர். அவரிடம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடும் திறன் உள்ளது. ஆனால், அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு அவர் முதலில் தனது மனதை சரிசெய்து கொள்ள வேண்டும். பின்னர், ராகுல் டிராவிட்டின் அறிவுரைகளை பின்பற்றி, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படி செய்தால், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.