இங்கிலாந்து வீரர் விலகல்… விசா கொடுக்காத இந்தியா – கடுப்பில் பென் ஸ்டோக்ஸ்!

IND vs ENG: ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் முறையே ஐந்து போட்டிகளும் நடைபெற உள்ளது. நாளை ஹைதராபாத் நகரில் போட்டி தொடங்க உள்ள நிலையில் வரும் மார்ச் மாத முதல் வாரம் வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது. 

பாஸ்பால் அணுகுமுறை

2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி கடைசியாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சுமார் மூன்றாண்டுகளுக்கு பின் ஒரு நீண்ட டெஸ்ட் தொடரை விளையாட தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பிரண்டன் மெக்கலத்தின் ‘பாஸ்பால்’ என்றழைக்கப்படும் புதிய ஆட்ட அணுகுமுறை உடன் இங்கிலாந்து அணி, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

குறிப்பாக, இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், மெக்கலாம் – ஸ்டோக்ஸ் ஆகியோரின் வியூகம் என்னவாக இருக்கும் என்பதே பலருக்கும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. அஸ்வின் போன்ற முக்கிய வீரர்களும் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்நோக்கி காத்திருப்பதாக பொதுவெளியில் தெரிவித்து குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. 

யார் இந்த பஷீர்?

இந்திய அணி மீதும் பல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. மேலும், இதுவரை பிசிசிஐ விராட் கோலிக்கு மாற்று வீரரை அறிவிக்கவில்லை. இங்கிலாந்து அணி தரப்பிலும் அதன் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக், தனிப்பட்ட காரணங்களுக்காக மொத்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில், தற்போது மற்றொரு இங்கிலாந்து வீரரும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து அணி வீரர் சோயப் பஷீர் (Shoaib Bashir) இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விசா அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பஷீர் விசா பிரச்சனைகளை சரிசெய்வதற்காக நாடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான அவர் பிரிட்டிஷ் – பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இங்கிலாந்து தரப்பில் இதுபோன்ற சிக்கல்களை சந்திக்கும் ஒரே ஒரு வீரர் இவர் மட்டும்தான். இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன் அபுதாபியில் பயிற்சி முகாமில் இருந்த இங்கிலாந்து அணியினர், முதல் டெஸ்ட் போட்டிக்காக ஹைதராபாத் வந்தனர். 

விசா தாமதமானதால் பஷீர் எமிரேட்டில் இருந்தார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரச்சினையை தீர்க்க முயற்சித்தது. இருப்பினும், தாமதம் நீடித்தது. இதனால் இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநரான ஸ்டூவர்ட் ஹூப்பர் பஷீருடன் தங்கியிருந்தார். இருப்பினும் அதற்கு ஒரு தீர்வு காண முடியவில்லை.

பென் ஸ்டோக்ஸ் அதிருப்தி

இந்திய தூதரகத்தில் தேவையான ஒப்புதலைப் பெறுவதற்காக பஷீர் இங்கிலாந்து திரும்பி உள்ளார். பஷீர் முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை. பஷீர் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்பதால் இங்கிலாந்து அணி அவரின் விலகலை இங்கிலாந்து முகாம் மிகவும் விரக்தியில் உள்ளது. 

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), “இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை பற்றிய அவரது முதல் அனுபவமாக இதுபோன்ற சூழ்நிலையை நான் விரும்பவில்லை. குறிப்பாக, ஒரு இளம் வீரருக்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.   

கேப்டனாக நான் அதை குறிப்பாக வெறுப்பாக உணர்கிறேன். டிசம்பரின் நடுப்பகுதியில் நாங்கள் அணியை அறிவித்தோம். இப்போது பஷிர் இங்கு வருவதற்கு விசா இல்லாமல் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், முதல் கிரிக்கெட் வீரர் அவர் அல்ல. இதே பிரச்சனை உள்ள பலரையும் நான் பார்த்துள்ளேன். நாங்கள் ஒரு வீரரைத் தேர்ந்தெடுத்தது எனக்கு வெறுப்பாக இருக்கிறது. மேலும் விசா சிக்கல்கள் காரணமாக அவர் எங்களுடன் இல்லை. இது ஒரு விரக்தியான சூழ்நிலை” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.