நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்ஐஏ சோதனை: டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகன் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, கோவை உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் நடைபெற்ற இச்சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், இருசக்கர வாகனத்தில் வந்த சேலம்செவ்வாய்பேட்டையை சேர்ந்த பொறியாளர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை சோதனை செய்தனர்.

சோதனையில், அவர்களிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், செட்டிச்சாவடி பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், இருவரையும்கைது செய்தனர். மேலும், அவர்களது கூட்டாளி அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி ’க்யூ’ பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தேச விரோதச் செயலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்ததால் வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு (தேசியபுலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள், இந்த வழக்குத் தொடர்பாக சிறையில் இருந்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை 7 நாட்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், இருவரும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு இணையான ஒரு அமைப்பை நிறுவி ஆயுதப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுடன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதும் என்ஐஏ விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் தமிழகத்துக்கு சட்ட விரோதமாக நிதி வந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு சொந்தமான 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இச்சோதனை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த பாலாஜி (33), திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பிரபல யூ-டியூபர் சாட்டை முருகன்வீடு, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள ஆர்.ஜி.நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் வீடு, கோயம்புத்தூர் காளப்பட்டி அருகே உள்ள சரஸ்வதி கார்டன் பகுதியைச் சேர்ந்த முருகன் வீடு, தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியைச் சேர்ந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வீடு,சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தைச் சேர்ந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் விஷ்ணு ஆகியோர் வீடுகளில் அதிகாலை 4 மணி தொடங்கி பல மணி நேரம் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், 4 பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான சட்ட விரோதமான புத்தகங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாட்டை முருகன், பாலாஜி, ரஞ்சித்குமார், முருகன், மதிவாணன், விஷ்ணு ஆகியோர் விசாரணைக்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர். இதேபோல நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கும் சம்மன் வழங்கினர்.

நானே ஆஜராகிறேன்: இந்நிலையில், என்ஐஏ சோதனை தொடர்பாக செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியபோது, ‘‘தேர்தல் நேரம் என்பதால் அச்சுறுத்தி பார்க்கின்றனர். பார்க்கப்போனால், என்னிடம்தான் என்ஐஏ விசாரணை நடத்தியிருக்க வேண்டும். 5-ம் தேதி நானே ஆஜராகிறேன். மொத்தமாக என்னிடம் விசாரிக்கட்டும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.