குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் ஜனாதிபதி செயலகத்தில்

குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் 2024.01.30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய சமன் ஏக்கநாயக்க, தற்போது ஜனாதிபதி செயலகமாக இருக்கும் பழைய பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து இவ்வாறான இளம் தலைமைத்துவம் உருவாகும் என நம்புவதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு எதிர்கால சந்ததியினர் உறுதிபூண வேண்டும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இதன்போது தெரிவித்தார். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த குஷானி ரோஹணதீர அவர்கள், ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்கு அமைய இளைஞர்கள் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பங்கேற்க அனுமதித்தல் மற்றும் அவர்களது முன்மொழிவுகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் குழு அறிக்கைகளில் உள்ளடக்குவதற்கு அனுமதி வழங்கிய முதலாவது பாராளுமன்றம், இலங்கைப் பாராளுமன்றமாகும் எனத் தெரிவித்தார்.

மாணவர் பாராளுமன்றம் உட்பட இவ்வாறான வேலைத்திட்டங்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நல்லதொரு சந்தர்ப்பமாக அமைகின்றது என பணியாட்தொகுதியின் தலைவரும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார். அத்துடன், அவர் நடத்திய கேள்வி-பதில் அமர்வில் மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அதிகாரிகள் மற்றும் அதிதிகளால் ஆழமான பதில்கள் அளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன குருநாகல் மலியதேவ மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, பல்வேறு ஊடகங்களில் காட்டப்படுவதற்கு அப்பால் பாரிய சட்டமியற்றும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் இடம்பெறுவதாகத் தெரிவித்தார். அத்துடன், மாணவர்களை பாராளுமன்றத்திற்கு வருகை தருமாறும் உதவிச் செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்தார்.

இலங்கை வரலாற்றில் பல முக்கிய தீர்மானங்களுக்கு அடைக்கலம் கொடுத்த சட்டவாக்கக் கட்டடமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்த விவாதத்தை நடத்துவது மாணவர்களுக்குக் கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் என குருநாகல் மலியதேவ கல்லூரியின் அதிபர் W.M.C.K. மஹமிதாவ தெரிவித்தார்.

குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை முகாமையாளர் புத்தினீ ராமநாயக்க, பொதுமக்கள் சேவை அதிகாரிகளான துமிந்த விக்ரமசிங்க, ரிஷ்மியா நூட்டான், பி. ருத்ரகுமார் மற்றும் பொதுமக்கள் சேவை ஒருங்கிணைப்பாளர் ஜெய பிரகாஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.