300-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள்…தனி விமானம்…தனி ராணுவம்…அசர வைக்கும் மலேசியா புதிய மன்னரின் ஆடம்பரம்

கோலாலம்பூர்,

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது.

முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார்.

நீதிமன்றங்கள், காவல் துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது.

மலேசியாவில் 9 அரச குடும்பங்கள் உள்ளன.இவர்களில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்நிலையில் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத்ஷாவின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றதையடுத்து நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

புதிய மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. இவரிடம் 300 கார்கள் மற்றும் ஜெட் விமானங்கள் உள்ளன. இதில் ஒரு கார் ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் பரிசளித்தது. தனியாக ராணுவம் வைத்துள்ளார். இவரது குடும்பமும் சிங்கப்பூரில் நிலம் மற்றும் பாமாயில், ரியல் எஸ்டேட் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி ஆகும்.

மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர் கூறும்போது, நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன். ஆனால் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன் என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.