Animal: "அனிமல் படம் பார்த்துட்டு தூங்கினா கேவலமான கனவா வருது!" – லட்சுமி ராமகிருஷ்ணன்

ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படம் ஆணாதிக்க சிந்தனையோடு இருப்பதாக கடுமையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

திரை பிரபலங்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது எக்ஸ் பக்கத்தில் ‘படம் நல்லாருக்கு… ஆனா, ரொம்ப வக்கிரமா இருக்கு’ என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். அவரைத் லட்சுமி ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம்…

”அனிமல் படத்தைப் பார்த்தேன். வக்கிரத்தின் உச்சம்னுதான் சொல்லணும். சமூகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தினந்தினம் நடந்துட்டு வருது. இப்படியொரு சூழலில், ஆணாதிக்கத்துடனும் அதிக வன்முறையுடனும் பிற்போக்குத்தனம் நிறைந்த படமா எடுக்கப்பட்டிருக்கு. ஒரு பாலியல் தொழிலாளி அல்லது ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்னையைப் பற்றி படம் எடுக்கிறோம்; பேசுகிறோம் என்றால் தவறில்லை. ஆனால், அதை எப்படி காண்பிக்கிறோம், அந்தப் படத்திற்கு, அந்த திரைக்கதைக்கு, அந்தக் காட்சி அவசியமா? அந்தக் காட்சியை எப்படி படமாக்கிறோம் என்பது முக்கியம்.

அனிமல்

உதாரணமாக, ‘அனிமல்’ படத்தின் திருமணக் காட்சியில் அத்தனைபேர் முன்னிலையில் வில்லன் அந்தப் பெண்ணிடம் வக்கிரமாக நடந்துகொள்ளும் விதம் எரிச்சலாக இருந்தது. அதேமாதிரி, கொலைகளை இவ்வளவு ரத்தம் சிந்தி அதிக வன்முறையுடன் காட்டவேண்டுமா? இப்படி ஒரு சில சீன்கள் ரொம்ப அருவருப்பா இருந்துச்சு. ராஷ்மிகா முன்னணி நடிகையா இருக்காங்க. நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா, அவங்கள மாதிரி நடிகை இந்தப் படத்துல நடிக்கும்போது தவறான கருத்துகள் இன்னும் மக்களைப் போய்ச் சேரும். பெண்களை சிறுமைப்படுத்தும் இதுபோன்ற கதைகளில் நடிக்க ராஷ்மிகா யோசிக்கவேண்டும்.

ஆணாதிக்கத்தனத்துடன் இப்படியொரு படம் எடுக்கிறாங்கன்னா, நிச்சயமா அவங்க மனசுல எவ்ளோ வக்கிரம் இருக்கும்? அவங்களோட மனசுக்குள்ள இருக்கிற மொத்த வக்கிறத்தையும் கொட்டிட்டாங்க. படத்தைப் பார்த்து முடிச்சதுமே என்னால தாங்கமுடியாமத்தான் கிண்டலா என்னோட ட்விட்டர்லயும் பதிவு பண்ணேன். ஆனா, ரசிகர்கள் வேறமாதிரி எடுத்துக்கிட்டாங்க. இப்படியொரு மோசமான படத்துக்கு வெளிப்படையால்லாம் திட்ட முடியாது.

லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்தமாதிரி கேவலமான படத்துல பெண்களும் நடிக்க ஒகே சொல்லிடறாங்க. மக்களும் பார்த்து வெற்றியடைய வைக்குறாங்க. அனைவரும் ஒன்றிணைந்து எங்கக் குழந்தைகளுக்கு இந்தமாதிரி படம் வேண்டாம்னு நினைச்சு புறக்கணிச்சா, எவனும் வக்கிர புத்தியோட படம் எடுக்கமாட்டான். குடும்பத்துடன் வந்து பார்த்து மகிழ்ந்து ரசிக்கும்படி படம் எடுக்கணும். ஆனா, இந்தமாதிரி படத்தையெல்லாம் பார்த்தா வக்கிரப் புத்திதான் சமூகத்துல உருவாகும். இளம் தலைமுறையினர் தவறான வழிக்குத்தான் செல்வார்கள். படத்தைப் பார்த்துட்டுப் படுத்தா, இரவுல கேவலமான கனவுகள்தான் வருது. அப்படியிருக்கு இருக்கு படம்” என்கிறார் கோபமுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.