`நாங்க கொடுக்குற நிதிய வெச்சுக்கிட்டு, இந்த பேச்சு பேசுறீங்க'- மத்திய அரசை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்

கடந்த திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் INDIA கூட்டணிக் கட்சிகள் சார்பில் ‘வெல்வது நிச்சயம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கால்நடை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய கால்நடை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “உடன்குடியில் உள்ள டிடிடிஏ(TTDA) பள்ளியைக் கிறிஸ்தவர்கள் நடத்தினார்கள். அங்கு இந்து, கிறிஸ்துவர் என எல்லாரும் படித்தார்கள். நாங்களும் பள்ளி நடத்துவோம் என ராமகிருஷ்ணா பள்ளியை ஒரு குழு ஆரம்பித்தது. ஆனால், இப்போது அங்கங்கு மோடிதான் வெல்வார் என பா.ஜ.க கொடியை நடுகிறீர்களே… முறையாக அந்தப் பள்ளியை உங்களால் நடத்த முடிகிறதா? உங்களால் முடியவில்லை என்றால், சொல்லுங்கள் நாங்கள் நடத்திக்கொள்கிறோம்.

மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து, மழைவெள்ளம் வந்தது. அதைப் பார்க்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து ‘நாங்கள் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்க மாட்டோம்’ எனக் கூறினார். மாநில அரசான நாம் கொடுக்கும் நிதியை வைத்துக்கொண்டுதான் அந்தப் பேச்சைப் பேசினார். வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் என்னென்ன பாதிப்பு என்பதைப் பற்றிக் கவலையில்லாமல், ஸ்ரீ வைகுண்டம் கோவிலுக்கு வந்து ‘கோயில சுத்தம் பண்ணலையே’ எனக் கேட்கிறார்.

INDIA கூட்டணி – ‘வெல்வது நிச்சயம்’ – பொதுக்கூட்டம்

கோயிலை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாதா… நாங்கள் தர்காவுக்கும், சர்ச்சுக்கும், முத்தாரம்மன் கோவிலுக்கும் செல்பவர்கள். இப்போதுகூட திருச்செந்தூர் கோயிலில் 300 கோடி ரூபாய்க்கு பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் பணிகளெல்லாம் யாரால் நடக்கிறது. அன்று, நீங்கள் இருந்தபோது, நான் கட்டித் தருகிறேன் எனப் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அவரிடம் 50 சதவிகிதம் கமிஷன் கேட்டீர்கள்.

ஆனால் இன்று எங்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கோயிலும் கட்டுகிறார், கும்பாபிஷேகமும் நடத்துகிறார். இனி பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் , மகாராஷ்டிரா எனத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ.க இல்லாமல் காலியாகப் போகிறது. இப்போதும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இல்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பா.ஜ.க-வை விரட்டிக்கொண்டிருக்கிறார்.” எனக் காட்டமாகப் பேசினார்.

ஆளூர் ஷாநவாஸ்

அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசத் தொடங்கினார். “தென் மாவட்டங்களை கடும் வெள்ளம் தாக்கியபோது அவர்கள் உதவி செய்ய வரவில்லை, மாறாக உபத்திரம் செய்ய வந்தார்கள். மாதக்கணக்கில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிமிடம் வரை மக்களின் துயரத்தை அறிவதற்குப் பிரதமர் அங்கே செல்லவில்லை. வெள்ளத்திற்குக் கூட ஏற்கெனவே ஒதுக்கிய நிதியைத்தான் தந்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி வெள்ளத்திற்கோ, சென்னை வெள்ளத்திற்கோ ஒரு பைசாகூட தரவில்லை. தூத்துக்குடிக்கு வந்தது இயற்கைப் பேரிடர். ஆனால் இந்தியாவே இன்று பா.ஜ.க என்ற பேரிடரில் சிக்கியிருக்கிறது. நம் முதல்வர் டெல்லிக்கு இந்தியா கூட்டணி கூட்டத்திற்குச் சென்றாரே அதுவும் பேரிடர் மீட்புதான். வெள்ள பாதிப்பிற்காகத் தூத்துக்குடிக்கு வந்தாரே அதுவும் பேரிடர் மீட்புதான். பா.ஜ.க கூட்டணிக்குச் சென்று ஆள் பிடிக்க நாம் நினைக்கவில்லை. ஏனென்றால் நமக்கு இங்கு ஹவுஸ்புல். சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

INDIA கூட்டணி – ‘வெல்வது நிச்சயம்’ – பொதுக்கூட்டம்

அங்கு இந்தியா கூட்டணிதான் பெரும்பான்மை. ஆனால் அந்த தேர்தல் அதிகாரி குறுக்கு வழியில் பா.ஜ.க-வை வெற்றிப்பெற வைத்தார். அரிதினும் அரிதாகத்தான் நீதிமன்றம் நியாயத்தின் பக்கம் நிற்கிறது. ‘சண்டிகரில் நடந்தது ஜனநாயகப் படுகொலை’ ன உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். நமது அரசு என்ன திட்டம் செயல்படுத்த முயன்றாலும், ஆளுநர் அதற்கு எதிராகத்தான் பேசுவார். எத்தனையோ முறை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. ஆனாலும் ஆளுநர் அதைப் பொருட்படுத்தியது கிடையாது. எவ்வளவு அடித்தாலும் தாங்குவார் இந்த ஆர்.என்.ரவி..” எனப் பேசி முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.