ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர்… விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் தரமான பைக்!

Honda Stylo 160 Scooter: இந்த நவீன் காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பைக், கார் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஒரு குடும்பத்தில் வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது நான்கிற்கும் மேற்பட்டோர் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு கார் அவசியமாகிறது. இரு சக்கர வாகனம் என்பது வேலைக்கு செல்லுதல், கல்லூரி செல்லுதல் போன்ற அன்றாட பயன்பாட்டுக்கு உரியதாக உள்ளது.

அந்த வகையில், இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் நினைப்பவர்களில் கியர் பைக் வாங்க நினைப்பவர்கள் அதிகம் இருந்தாலும், ஸ்கூட்டர் போன்ற கியர் இல்லாத பைக்குகளுக்கும் நல்ல மவுஸ் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. ஆண், பெண், வயதானவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பையும் கவரும் வகையில், எளிமையான பயன்பாட்டாலும் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் மத்திய தர வர்க்கத்தினரின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. 

ஹோண்டா ஸ்டைலோ 160

இதையறிந்துதான், இந்திய சந்தையின் வாகனத் தயாரிப்பில் உச்சத்தில் இருக்கும் டிவிஎஸ், ஹீரோ, ஹோண்டா, யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் வெவ்வேறு மாடல்களில், வெவ்வேறு விலை அடுக்குகளில் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வைத்துள்ளன. ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஸ்கூட்டர்களின் விலை தொடங்கும். எனவே, பட்ஜெட் விலையிலும், அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் ஸ்கூட்டர்கள் எக்கச்சக்கமாக இந்திய சந்தையில் உலா வருகின்றன. 

அந்த வகையில், ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா அதன் புதிய மாடல் ஸ்கூட்டரான  ஹோண்டா ஸ்டைலோ 160 பைக்கை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடனும், பல பிரத்யேக அம்சகங்களுடனும் ஹோண்ட் இந்த 160cc பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு… இதனை ஆரம்பத்தில் இந்தோனேஷியாவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்களின் புதிய புதிய எதிர்பார்ப்புகளை எண்ணி இந்த பைக்கை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அசத்தும் அம்சங்கள்

மிகவும் வலுவான பைக்காக தோற்றமளிக்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்டைலோ 160 ஸ்கூட்டரை கொண்டு வந்துள்ளது. இது தற்போது பல்வேறு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. கருப்பு, பழுப்பு நிறங்களில் பைக்கின் பாடி மற்றும் சீட் வரும் வகையில் இது கிடைக்கிறது. இரு சக்கர வாகனத்தை ஓட்டும் போது கிடைக்கும் கொண்டாட்ட மனநிலையை இன்னும் ரசனைக்குரியதாக மாற்றும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எல்இடி லைட்டுகள், டிஜிட்டல் டிஸ்பிளே, யூஎஸ்பி சார்ஜிங் போன்றவை இந்த பைக்கை ஓட்டுபவர்களுக்கு அசாதாரண உணர்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும், சாவியில்லாமல் மிகுந்த பாதுகாப்புடன் ஆன் செய்வது போன்றது நவீனத்தை இன்னும் நெருக்கமாக்கியுள்ளது. மேலும், இது ABS/CBS வேரியண்ட்களில் கிடைக்கிறது என்பதால், தங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப இதனை வாங்கிக்கொள்ளலாம். 

இப்போது இந்தோனேஷியாவில் மட்டும்…

160cc சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் ஹோண்டா ஸ்டைலோ 160 பைக்கில் உள்ளது. இதன்மூலம், 16bhp உச்ச சக்தி மற்றும் 15Nm முறுக்குவிசையையும் வழங்கும். இதனால், நிதானமான மற்றும் அற்புதமான அனுபவத்தை நீங்கள் பெறலாம். குறிப்பாக, நீண்ட தூர பயணம் மற்றும் கடும் போக்குவரத்து நெருக்கடிகள் மிகுந்த நகரத்தில் ஓட்டுவது என இரண்டிற்கும் இது ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்சமயம் இந்தோனேஷியாவில் மட்டுமே விற்பனையில் உள்ளது. விரைவில் ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கை இந்திய சந்தை உள்பட பல சந்தைகளில் வருங்காலத்தில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த பைக்கின் வடிவமைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் நெருக்கடி மிகுந்த இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு ஏதுவானது என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.