Viduthalai 2 Exclusive: வெற்றிமாறனின் `விடுதலை 2' எப்போது வெளியாகும்? ஷூட்டிங் அப்டேட்ஸ்!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி மும்முரமாக நடந்து வருகிறது. முதல் பாகம் வெளியாகி பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கவனம் ஈர்த்தது. நாயகனாக சூரியும் கவனம் ஈர்த்தார். ஏற்கெனவே படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாக, அதற்கேற்றவாறு இந்தப் பாகத்தைச் செதுக்கி வருகிறார் வெற்றிமாறன்.

விஜய் சேதுபதி

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான படம் ‘விடுதலை’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவூட்டின. முதல் பாகம், படத்தின் கதைக்களம், அதன் மாந்தர்கள், அரசியல் பின்புலம் போன்றவற்றைக் கட்டமைத்து, அந்த உலகத்தை நமக்கு அறிமுகம் செய்யும் ஒன்றாக உருவாகியிருந்தது.

முதல் பாகத்தின் வெற்றி, இரண்டாம் பாகத்திலும் பிரதிபலிக்க, படக்குழுவினர் உழைத்து வருகின்றனர். காமெடி நடிகரான சூரி, அழுத்தமான வலுவான கதையின் நாயகனாக முதல் பாகத்தில் ஸ்கோர் செய்திருந்தார். சூரி தவிர, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ எனப் பலரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

விடுதலை படத்தில்…

முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரதை விட, சூரியின் கதாபாத்திரம்தான் அதிக இடம்பெற்றது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அதிகம் இருக்கும். அவரது இளமை காலக் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்துகின்றனர்.

பெருமாள் வாத்தியாருக்கு கம்யூனிசத்தில் தீவிரமான ஈடுபாடு எப்படி ஏற்பட்டது, அவரது இளமை காலம், திருமணம், கொள்கை எனப் பலவற்றை இது பேசவிருக்கிறது. விஜய் சேதுபதியின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஒருசில வாரத்திற்கு முன் சென்னையில் சில நாள்கள் நடந்தது. இப்போது தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு பரபரக்கிறது. விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் எனப் பலரும் அங்கே நடித்து வருகின்றனர். பீட்டர் ஹெய்னின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.

விஜய் சேதுபதி

தென்காசியில் தொடர்ந்து இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், இப்போது அங்கே க்ளைமாக்ஸ் ஃபைட் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சொல்கிறார்கள். இந்தப் படப்பிடிப்போடு ‘பாகம் 2’க்கான ஷூட்டிங் முழுமையாக நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டீ ஏஜிங் டெக்னாலஜிக்காக வெற்றிமாறன் அமெரிக்கா பறக்கிறார். அங்கே வேலைகள் முடிந்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.