Siren: `மாநகரம் படத்துக்குப் பிறகு இப்படியான கதை' – ஜெயம் ரவியின் 'சைரன்' படக்குழு சொல்வதென்ன?

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த ரிலீஸ் ‘சைரன்’.

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது, ‘சைரன்’. இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய இப்படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் , ” இந்த படம் எனக்கு முக்கியமான படம். மாநகரம் படத்திற்கு பிறகு இப்படியான சப்ஜெக்ட்ல ஒரு படம் பண்றேன். இயக்குநர் ஆண்டனிகிட்ட இருந்து இந்த மாதிரியான கதை நான் எதிர்பார்க்கவேயில்ல. இந்த படத்தோட கதை சீரியஸாக இருக்கும். வளர்ந்து வர்ற டெக்னீசியன்களை சுதந்திரமாக ஜெயம் ரவி வேலைப் பார்க்க விடுவாரு. இந்தப் படம் இந்த வருஷத்துக்கான முக்கியமான படமாக இருக்கும். ” என்றார் இவரைத் தொடர்ந்து வந்து பேசிய படத்தொகுப்பாளர் ரூபன், ” கதைக்கு மட்டும் முக்கியம் கொடுத்து பல இயக்குநர்களுக்கு வழி அமைத்த ஜெயம் ரவி சாருக்கு நன்றி. அழகம் பெருமாள் வில்லத்தனத்துல காமெடி பண்ணுவார். இன்னைக்கு இந்தியாவுல முக்கியமான நடிகர் சமுத்திரக்கனி. ” எனப் பேசி விடைபெற்றார்.

GV & Jayam Ravi

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், ” ஒரு பேமிலி என்டர்டெயினர் கமெர்சியல் படத்தை ரவி பண்ணியிருக்கார். நான் நடிச்ச ‘டார்லிங்’ படத்துல இயக்குநர் ஆண்டனி உதவி இயக்குநராக வேலை பார்த்தார். எழுத்து வேலைகளிலேயும் இயக்குநர் ஆண்டனி வேலை பார்த்திருக்காரு. அப்படி ரொம்பவே விறுவிறுப்பாக திரைக்கதையை எழுதுவார். இந்த வருடம் எனக்கு நல்ல படியாக தொடங்கியிருக்கு. கேப்டன் மில்லர், மிஷன் என ரெண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இது எனக்கு மூணாவது படம். என்னுடைய பழைய மெலடி பாடல்கள் மாதிரி இந்தப் படத்துக்கு பண்ணனும்னு கேட்டாங்க. அது மாதிரி இந்தப் படத்துக்குப் பண்ணியிருக்கோம்.” எனப் பேசி முடித்தார்.

இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் பேசுகையில், ” உதவி இயக்குநராக இருந்த நான் இரும்புத்திரை படத்தின் மூலமாகத் தான் எழுத்தாளராக அறிமுகமானேன். எடிட்டர் ரூபன் அண்ணன் மூலமாகதான் நான் இந்தக் கதையை ஜெயம் ரவி சார்கிட்ட சொன்னேன். ஜெயம் ரவி சார் கிட்ட மொபைல் இருக்கானு எனக்கு சந்தேகமாக இருக்கும். 2 மணி நேரமானாலும் முழுமையாக உட்கார்ந்து எதையும் பார்க்காம கதையை மட்டுமே கேட்பார். 75 நாட்கள் ஷூட்டிங் பண்ணோம். புதுமுக இயக்குநர் என்ற காரணத்துனால எடுத்த புட்டேஜஸ் கேட்பாருன்னு நினைச்சேன். ஆனா, என்னை நம்பி முதல் நாள்ல இருந்து 75வது நாள் வரைக்கும் எதையும் கேட்காம அப்படியேதான் இருந்தாரு. ஒரு கதைக்கு அந்த கதையை தாங்குற ஹீரோ கிடைச்சா போதும் , கண்டிப்பாக ஹிட் ஆகும்னு சமுத்திரக்கனி சொன்னார். எனக்கு முதல் நாள் ஷூட்டிங் போன பிறகுதான் கனி அண்ணன் சொன்னது புரிஞ்சது. இந்த படம் தமிழ்ல அனுபமா மேடமுக்கு நல்ல திரைப்படமாக கண்டிப்பாக இருக்கும்.” என்றார்.

Samuthirakani

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, ” சினிமாவுல எல்லாம் தெரிந்தவர்கள் குறைவுதான். ரவிக்கு எல்லாமே தெரியும். அவருக்கான திறமைக்கு இன்னும் பெரிய இடங்கள் காத்திருக்கு. ஜெயம் ரவிகூட 100 படங்கள்கூட பண்ணலாம். ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணமா இருக்கும்.” எனக் கூறினார்.

இறுதியாக வந்து பேசிய ஜெயம் ரவி, ” ரொம்ப மகிழ்ச்சியான மேடை இது. இந்த படம் நல்லபடியாக வந்திருக்குன்னு நினைக்கும்போது மகிழ்ச்சி. முதல் நாள்லேயே படத்தை பத்தி பிரஸ் மற்றும் மீடியா சொல்லிடுறீங்க. அதுனால நல்ல படங்கள் வெளிய தெரிஞ்சிருக்கு. ‘அடங்கமறு’ படத்தோட இயக்குநரையும் எனக்கு அனுப்பி வைத்தது ரூபன்தான். இந்த படத்தோட இயக்குநரை அனுப்பி வைத்ததும் ரூபன்தான். இந்தப் படத்துல எமோஷன் முக்கியமானதாக இருக்கு. அதுக்கு வலுவான இசையமைக்க ஜி.வி வந்தார். இந்தியாவுல மிகச் சிறந்த இசையாமைப்பாளர் ஜிவி. இந்தப் படத்துக்கு வலிமையான பெண் கதாபத்திரம் தேவைப்பட்டுச்சு.

ஜெயம் ரவி

அதுக்குப் பிறகுதான் கீர்த்தி சுரேஷ் படத்துக்குள்ள வந்தாங்க. கிளைமேக்ஸ் பார்க்கும் போது இந்த படத்தோட உணர்வு தெரியும். கீர்த்தி சுரேஷ் அவங்களோட கதாபாத்திரத்துல ரொம்பவே நல்லா பண்ணியிருக்காங்க. சமுத்திரகனியோட இப்போதான் முதல் படம் நடிக்கிறேன். அழகம் பெருமாள் சார்கூட நான் அடங்கமறு படத்துல ஏற்கெனவே வேலை பார்த்திருக்கேன். இயக்குநர் ஆண்டனியை இன்னும் சிறந்த மேடைக்கள்ல பார்ப்பீங்க. இது எமோஷனல் படம். இந்த படம் நான் ரசிச்சு பண்ணேன். யோகி பாபுவும் நானும் இந்த படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல ஒண்ணாகதான் இருந்தோம். ‘கோமாளி’ படம் மாதிரி எனக்கும் அவருக்கும் நல்ல காம்பினேஷன் இந்த படத்துல இருக்கும்.” என முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.