விருதுநகர் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன்?! – பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக

மதுரை: பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராம.சீனிவாசன் போட்டியிடுவதாக கூறி பாஜகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக, பாஜக கூட்டணி முடிவாகாத நிலையில் தேர்தல் தயாரிப்பு, தேர்தல் அலுவலகம் திறப்பு, நிர்வாகிகள் ஆலோசனை என தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகளை விட பாஜக ஒரு படி முன்னேறி தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் விருதுநகர் தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு போராட்டங்கள், நிகழ்ச்சிகளை தொகுதியில் நடத்தி வந்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய நிர்வாகிகளை விருதுநகருக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் என்ற பிட் நோட்டீஸ்களை அச்சடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பாஜக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் தலைமையில் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு பிரதமர் மோடியின் பத்தாண்டு சாதனைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

அதில், ‘திருமங்கலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது, கிராமங்கள் தோறும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் அளித்தது, ரூ.5 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அளித்தது, பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியது, வீடு கட்டும் திட்டத்துக்கு மானியமாக ரூ.2.67 லட்சம் அளித்தது, விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2,000 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வந்தது, கிராமச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளுடன் இணைத்தது, பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை ஏற்பட்டபோது உச்ச நீதிமன்றம் சென்று தடையை நீக்கியது, தேவேந்திரர் அரசாணை பெற்றுத் தந்தது’ உள்ளிட்ட சாதனைகள் அச்சடிப்பட்டிருந்தது.

இதனிடையே, விருதுநகர் தொகுதி முழுவதும் ராம.சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்படும் என ஊடகப் பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.