துருவ் ஜூரல்: கார்கில் வீரரின் மகன், அம்மா நகைகளை அடகு வைத்து கிரிக்கெட் கிட் வாங்கிய இளைஞர்..!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறார் துருவ் ஜூரல். விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேஎஸ் பரத் சிறப்பாக விளையாடாததால் அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விளையாட வாய்ப்பு கொடுத்துள்ளது இந்திய அணி. அக்ராவைச் சேர்ந்த ஜூரலுக்கு இப்போது 23 வயதாகிறது. இவரது தந்தை நேம் சிங் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் துருவ்வை கிரிக்கெட்டில் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அத்தனை முயற்சிகளையும் எடுத்தது அவரது தந்தை தான். இது குறித்து துருவ் ஜூரல் தந்தை பேசும்போது, “எனக்கு மகிழ்ச்சி. அவர் ஐபிஎல் தொடரில் விளையாட தேர்வானபோதே இந்திய அணிக்காக விளையாடும் நாளை நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். 

அந்த கனவு நாள் இப்போது நனவாகியிருக்கிறது. மகன் துருவிடம் பேசினேன். முன்பை விட இன்னும் நம்பிக்கையாக இருக்குமாறு கூறியிருக்கிறேன். சிறப்பாக விளையாடுவார். கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.” என கூறினார் நேம் சிங். இவருக்கு தனது மகன் ஜூரல் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு சிப்பாயாக நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்றே விரும்பினாராம். தன்னுடைய பாரம்பரியத்தை அவரும் பின்பற்ற வேண்டும் என விரும்பிய நிலையில் துருவ் ஜூரல் கவனம் கிரிக்கெட் பக்கம் திரும்பியது. 

அவர்கள் குடும்பத்தில் யாரும் இதுவரை கிரிக்கெட் விளையாடாத நிலையில், ஒரு நிலையான வேலையை பெற்றுவிட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார் நேசம் சிங். இருப்பினும் மகன் ஜூரல் கிரிக்கெட் விளையாட தொடங்கியபோது, அவர் நன்றாக விளையாடுகிறார் என பலரும் தெரிவித்ததாக குறப்பிடும் அவர், அப்போதும் கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கவலைகள் இருந்ததாக தெரிவிக்கிறார். “ஒரு தந்தையாக ஜூரல் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டேன். ஆக்ராவில் ஸ்பிரிங்டேல் அகாடமியை நடத்தி வந்த பயிற்சியாளர் பர்வேந்திர யாதவை சந்தித்து தனது மகனை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தேன். 

அப்போது தான் கிரிக்கெட் கிட் வாங்க வேண்டும் என எனக்கு தெரிந்தது. ஜூரல் பேட்ஸ்மேனாக வேண்டும் என விரும்பினார். முதல் பேட்டை 800 ரூபாய் செலவு செய்து வாங்கி கொடுத்தேன். முதல் கிட் வாங்க மனைவியின் தங்க சங்கிலியை அடகு வைத்து தான் வாங்கி கொடுத்தேன். கிரிக்கெட் விளையாட அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருந்ததாலும், கடன் வாங்க வேண்டியிருந்ததாலும் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் துருவ் ஜூரல் நன்றாக விளையாடியதால், அவரது பெயரை சொல்லி என்னை அழைக்கின்றனர். எங்கு சென்றாலும் துருவ் ஜூரல் தந்தை என சொல்கிறார்கள். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்றுவரை ஜூரல் கிரிக்கெட் விளையாட உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்” என தெரிவித்துள்ளார்

துருவ் ஜூரல் 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். 23 போட்டிகளில் விளையாடி 244 ரன்கள் எடுத்தார். 137.7 சராசரியில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட அவர், உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேசத்திற்காக 10 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடினார். 7 இன்னிங்ஸ்களில் 47.25 சராசரியுடன் 2 அரைசதங்களுடன் 189 ரன்கள் எடுத்துள்ளார். 

அத்துடன், 2021-22 ரஞ்சி டிராபி சீசனில் உத்தர பிரதேச அணிக்காக தனது முதல் தர கிரிக்கெட் விளையாடினார். அவர் இதுவரை விளையாடிய 15 போட்டிகளில், 46.47 சராசரியில் 790 ரன்கள் எடுத்துள்ளார். 19 இன்னிங்ஸ்களில் 1 சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடித்துள்ளார். 2022 ரஞ்சி டிராயில் நாகாலாந்துக்கு எதிராக 329 பந்துகளில் 249 ரன்கள் எடுத்தார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கும் ஜூரல் சர்வதேச பயணமும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் ஜூரல் தந்தை நேம் சிங் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.