Kerala couple with twins dies mysteriously in US | இரட்டை குழந்தைகளுடன் கேரள தம்பதி அமெரிக்காவில் மர்ம மரணம்

கலிபோர்னியா, அமெரிக்காவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரட்டை குழந்தைகள், தங்கள் வீட்டில் நேற்று முன்தினம் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஆனந்த் சுஜித் ஹென்றி, 42, மற்றும் ஆலிஸ் பிரியங்கா, 40. மென்பொறியாளர்களான இருவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினர்.

அங்கு, ‘பேஸ்புக்’கின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ மற்றும் ‘கூகுள்’ ஆகியவற்றில் பணியாற்றிய ஆனந்த், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை சொந்தமாக துவங்கினார்.

அவர் மனைவி ஆலிஸ் கலிபோர்னியாவில் மென்பொருள் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 4 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.

தம்பதி, 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவில் குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அவர்களை தொலைபேசி வாயிலாக உறவினர்கள் நேற்று முன்தினம் தொடர்பு கொள்ள முயன்றபோது பதில் இல்லை. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் ஆனந்த் வீட்டிற்கு சென்று கதவை தட்டிய போதும், யாரும் வெளியே வரவில்லை.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு குளியலறையில் தம்பதி இருவரும் இறந்து கிடந்தனர். படுக்கை அறையில் இரட்டை குழந்தைகள் இறந்து கிடந்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

வீட்டுக்குள் வெளி நபர்கள் அத்துமீறி நுழைந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை. குளியலறையில் இறந்து கிடந்த தம்பதியின் உடலில் குண்டு காயங்கள் இருந்தன.

மேலும் இருவரது உடலின் அருகே கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், தற்கொலை குறிப்பு எதுவும் இல்லை.

மேலும், குழந்தைகளின் உடலில் குண்டு காயங்கள் இல்லை. அவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

ஆனந்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், குழந்தைகள் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன், அவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்து உள்ளார். பின், அந்த வழக்கை கைவிட்டிருக்கிறார்.

ஆனந்த் அனைவரையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை நடந்து உள்ளதா என குற்றப் புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.