“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் கடன் அதிகரிப்பு” – இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது. இந்த கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக, ஒரு நிபுணர் குழுவை அமைத்தனர். இப்போது அந்தக் குழுவைத் தேடி கண்டுபிடிப்பதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையைத்தான் இப்போது இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறது” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, சட்டமன்றத்துக்கு வெளியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது: “திமுக அரசு 4-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகமாக காணப்படுகிறது. மக்களுக்கான திட்டங்கள் எதுவுமே இல்லை.

பெரிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில், ஏழை மக்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது.

3 ஆண்டுகாலமாக மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற உட்புறச் சாலைகள் சீர் செய்யப்படவில்லை. இந்த ஆண்டுதான் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் 1 லட்சத்து 52 ஆயிரம் கி.மீ உள்ள சாலைகளை சீர் செய்வதற்கு வெறும் 1,000 கோடிதான் ஒதுக்கியுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்கள். இந்த பட்ஜெட்டில் அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்டத் தொகை ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும். அதுபோலத்தான், இந்த ஆண்டும் திமுக அரசு அனைத்து துறைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கியுள்ளது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றப்பிறகு, 2021-22ல் 72, 839.29 கோடி பற்றாக்குறை, 2022-23ல் 1 லட்சத்து 55 ஆயிரத்து 625.11 கோடி பற்றாக்குறை, 2023-24ல் 2 லட்சத்து 49 ஆயிரத்து 684 கோடி பற்றாக்குறை, 2024-25 திட்ட மதிப்பீட்டில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 384 கோடி பற்றாக்குறை என்று கூறுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 659 கோடி என்று கூறியுள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் இருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாக, 2021 பொதுத் தேர்தலின்போது, பொதுக்கூட்டங்களில் பேசிய தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை கடனாளியாக்கிவிட்டதாக குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார். இப்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது. இந்தக் கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக, நிபுணர் குழு அமைக்கப்படும் என்றுகூறி ஒரு குழுவை அமைத்தனர். இப்போது அந்தக் குழுவைத் தேடி கண்டுபிடிப்பதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையைத்தான் இப்போது இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறது.

எங்களுக்கு நிதிநிலை புத்தகம் கொடுக்கவில்லை. கணினியில்தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். எனவே, முழுமையான தகவல்களை எடுக்க முடியவில்லை. இந்த நிதிநிலை வரவு செலவுத் திட்டங்களைப் பார்க்கும்போது அதில் பல குளறுபடிகள் இருக்கின்றன. அவையெல்லாம் முழுமையாக என்னுடைய அறிக்கையில் கொடுக்கப்படும்” என்று அவர் கூறினார். | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.