9 மில்லியன் டாலருக்காக நெருங்கிய தோழியைக் கொன்ற வழக்கு; இளம்பெண் உட்பட இருவருக்கு 99 ஆண்டுகள் சிறை!

2019-ம் ஆண்டு அமெரிக்காவின் எக்லுட்னா ஆற்றின் கரையில், தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த அடையாளம் தெரியாத சடலத்தைக் காவல்துறை கைப்பற்றி, தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது. அந்த விசாரணையின் முடிவில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியான நிலையில், தீர்க்கப்படாத மர்மமும் தொடர்கிறது.

காவல்துறை

2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தன் நெருங்கிய தோழியான டெனாலி ப்ரெஹ்மருடன் வெளியே செல்வதாகக் கூறி, சிந்தியா ஹாஃப்மேன் என்ற 19 வயது பெண் வீட்டை விட்டுப் புறப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு அந்தப் பெண் காணவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு சிந்தியா ஹாஃப்மேனின் சடலம் எக்லுட்னா ஆற்றங்கரையில் கிடைத்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில், சிந்தியா கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக சிந்தியா ஹாஃப்மேனின் நெருங்கிய தோழி டெனாலி ப்ரெஹ்மரிடம் காவல்துறை விசாரித்தது. அப்போது அவர், “டைலர் என்ற சமூக வலைதளப் பயனாளி ஒருவர் என்னையும், என்னுடைய நண்பர்களையும் தொடர்பு கொண்டார். அவர் எங்களிடம் ‘நான் டைலர்… பெரும் பணக்காரன்.

அமெரிக்கா சிறை

உங்களின் தோழி சிந்தியா ஹாஃப்மேனை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தால், உங்களுக்கு 9 மில்லியன் டாலர் தருகிறேன். ஆனால், சிந்தியா ஹாஃப்மேன் கொலைசெய்யப்பட்டவுடன் அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எனக்கு அனுப்ப வேண்டும்’ எனக் கூறினார். நானும் என்னுடைய நண்பர்களும், அந்த நபர் சொன்னதை நம்பினோம். அதற்காக சிந்தியா ஹாஃப்மேனை கொலைசெய்ய நான், என்னுடைய நண்பர் கெய்டன் மெக்கின்டோஷ் உட்பட மூவர் திட்டமிட்டோம்.

எங்கள் திட்டப்படி, சிந்தியா ஹாஃப்மேனிடம் `தண்டர்பேர்ட் அருவிக்குச் செல்லலாம், வா…’ எனக் கூறி, கட்டாயப்படுத்தி வரவழைத்தோம். நாங்கள் அங்கே சென்றதும் துப்பாக்கியால் அவரின் பின் தலையில் சுட்டுக் கொன்றோம். அதைப் பல்வேறு வகையில் புகைப்படம் எடுத்து டைலருக்கு அனுப்பினோம். மேலும், சிந்தியா ஹாஃப்மேனின் உடலை எரித்துவிடத் திட்டமிட்டோம். அதற்கான வாய்ப்பு அங்கு இல்லாததால், ஆற்றில் உடலை வீசிவிட்டோம்” என வாக்குமூலம் அளித்திருந்தார்.

காவல்துறை

கொலைசெய்து அனுப்பப்பட்ட புகைப்படங்களையும், நிர்வாணப் புகைப்படங்களையும் காவல்துறை கைப்பற்றியது. மேலும், இந்த வழக்கில் கொலைக் குற்றத்தைத் தூண்டிவிட்ட அந்த டைலர் குறித்து காவல்துறை விசாரித்ததில், இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த டேரின் ஷில்மில்லர் (21) என்பவர்தான் டைலராக நடித்து, அந்தப் பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொலைசெய்வதற்குத் தூண்டிவிட்ட டேரின் ஷில்மில்லருக்கும், கொலைசெய்த டெனாலி ப்ரெஹ்மருக்கும் 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சிந்தியா ஹாஃப்மேனை பணத்துக்காக அவரின் தோழிகள் கொலைசெய்தனர் என்பது புலனாகிறது. ஆனால், அந்த டைலர் என்ற டேரின் ஷில்மில்லர் எதற்காக இந்தக் கொலையைச் செய்ய தூண்டினார் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.