“உணவு தானிய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா..!"

“உணவு தானிய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் நம் நாடு செல்வ செழிப்பாக வளர்ந்துள்ளது…” என்று கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அருணாச்சலம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பொருளாதாரத் துறை சார்பில் ‘விக்சித் பாரத் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் 2047’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியர் முனைவர் அருணாச்சலம், “இந்தியாவில் 43 மில்லியன் மாணவர்கள் தற்போது கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். உலக அளவில் இந்தியா நான்கில் ஒரு பங்கு வளங்களை கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1947 -ம் ஆண்டு ஒரு சதவிகிதமாக இருந்தது. தற்பொழுது 7.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

1947 -ம் ஆண்டில் இந்தியர்களின் வாழ்நாள் 35 வயது ஆகவும், கல்வியறிவு 10 சதவிகிதம் மட்டுமே இருந்த நிலையில், தற்பொழுது கல்வி அறிவு 80 சதவிகிதமாகவும், வாழ்நாள் 75 ஆண்டுகளாகவும் உயர்ந்துள்ளது.

பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. உணவு தானிய உற்பத்தியில் 1947-ல் 50 மில்லியன் டன் என இருந்த நிலையில், தற்பொழுது 330 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியை அடைந்துள்ளது.

பொருளாதாரத் துறை கருத்தரங்கு

இந்தியா உணவு தானிய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் நம் நாடு செல்வ செழிப்பு நாடாக வளர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் உலக அரங்கில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இறுதியில் இந்தியா 2047 -ம் ஆண்டு பொருளாதாரத்தில் வல்லரசு நாடாக உயரும்.” என்று பேசினார்.

பின்னர் மாணவர்கள், இந்திய பொருளாதாரத்தில் வரவு செலவுத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும், இந்தியா எவ்வாறு 2047 இல் வல்லரசாக மாறும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி அவரிடம் விளக்கம் பெற்றார்கள்.

இந்த கருத்தரங்கினை பொருளாதாரத் துறை முதுகலைத் தலைவர் முனைவர் சி.முத்துராஜா, பேராசிரியர் முனைவர் செல்வக்குமார் ஒருங்கிணைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.