“விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட் இது” – இபிஎஸ் @ வேளாண் பட்ஜெட்

சென்னை: “வேளாண் பட்ஜெட்டை பொறுத்தவரைக்கும் விவசாயிகளுக்கு பலனில்லை. திட்டம் எதுவும் இல்லை. வேளாண் கல்லூரி சார்ந்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட் இது” என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவின் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதுவரை வழங்கவில்லை. அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.215 வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியால் டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு ஏதும் அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் வேதனைக்குரியது.

டெல்டா மாவட்டத்தில் சம்பா பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தென் மாவட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீர் செய்து கொடுக்க வேண்டும். இன்றைய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த வேளாண் அமைச்சரின் சொந்த தொகுதியில் இருக்கிற கூட்டுறவு சக்கரை ஆலையை முழுமையாக இயக்காத அரசுதான் திமுக அரசு.

இயற்கை விவசாயத்துக்கு இந்த வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. நிதி ஒதுக்கீடும் இல்லை. எல்லோரும் இயற்கை விவசாயத்தை நாடிச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைய பட்ஜெட்டில் அதற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. தேர்தல் அறிக்கையில் தென்னை விவசாயிகளுக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. நீரா போன்ற பதநீர் இறக்கப்படும் என்றார்கள். ஆனால் பட்ஜெட்டில் அதுதொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.

காவிரி குண்டாறு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மேகேதாட்டு பற்றி பட்ஜெட்டில் எந்த தகவலும் இல்லை. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றோம். அது தொடர்பான எந்த விதமான அறிவிப்பும் இல்லை. இதேபோல் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு இந்த அரசு முயற்சி எடுக்கவில்லை. இந்த அரசு செயல்படாத அரசு என்பதற்கு இதுவே உதாரணம்.

சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. கிராமப்புறங்களுக்கு முக்கியதத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டை பொறுத்தவரைக்கும் விவசாயிகளுக்கு பலனில்லை. திட்டம் எதுவும் இல்லை. வேளாண் கல்லூரி சார்ந்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட் இது.

பிற மாநில ஒத்துழைப்பை இந்த அரசு நாட வேண்டும். அதிமுக ஆட்சி இருந்த தெலங்கானா மற்றும் ஆந்திர முதல்வர்களைச் சந்தித்து நீரை பெற்றது. ஆனால் திமுக அரசு எந்த மாநில முதல்வர்களையும் சந்திக்கவில்லை” என்று விமர்சனம் செய்தார்.

வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.