`டர்பன் அணிந்திருந்த போலீஸை காலிஸ்தான் தீவிரவாதி என்பதா?' – பாஜக-வை சாடும் மம்தா

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் ஷாஜகான் ஷேக். இவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து, சந்தேஷ்காளி கிராமத்தில் நில அபகரிப்பு, பெண்களிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டதாகக் கிராம பெண்கள் பிப்ரவரி 7-ம் தேதிமுதல் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் அச்சத்தால் அமைதியாக இருந்ததாகவும், இனி எது வந்தாலும் பரவாயில்லை என்று நீதி கேட்டு போராட்டம் நடத்துவதாகப் போராட்ட பெண்கள் கூறிவருகின்றனர். அதேசமயம், இன்னும்தலைமறைவாக இருக்கும் ஷாஜகான் ஷேக்கை போலீஸார் கைதுசெய்யவில்லை.

ஷாஜகான் ஷேக்

உள்ளூர் காவல் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிடுதல் போன்ற செயல்பாடுகள் காரணமாக, சந்தேஷ்காளியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பெரிய அரசியல் தலைவர்கள் என யாரையும் போலீஸார் கிராமத்துக்குள் நுழைய விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், மாநில எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரியை அமைதியான முறையில் கிராமத்துக்குள் நுழைய கொல்கத்தா உயர் நீதிமன்ற டிவிஷன் பென்ச் உத்தரவிட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டர்பன் அணிந்திருந்த சீக்கிய போலீஸ் அதிகாரியை, பா.ஜ.க எம்.எல்.ஏ காலிஸ்தானி தீவிரவாதி என கூறியதாக அந்த நபர் பேசும் வீடியோவை வெளியிட்டு, பா.ஜ.க-வை சாடியிருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த சம்பவமானது, சந்தேஷ்காளி கிராமத்தை நோக்கி கட்சிக்காரர்களுடன் திரளாக வந்த சுவேந்து அதிகாரியை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது நடந்திருக்கிறது.

இதுதொடர்பான வீடியோவில், மம்தா பானர்ஜி குற்றம்சாட்டும் பா.ஜ.க எம்.எல்.ஏ அக்னிமித்ர பால், தங்களை அனுமதிக்காத டர்பன் அணிந்திருந்த சீக்கிய போலீஸ் அதிகாரியை நோக்கி, `காலிஸ்தானி தீவிரவாதி’ என கத்தியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அந்த சீக்கிய போலீஸ் அதிகாரி, “நான் டர்பன் அணிந்திருப்பதால் இப்படிச் சொல்கிறீர்கள். உங்களுக்கு காவல்துறையிடம் ஏதாவது பிரச்னை என்றால் காவல்துறையைப் பற்றி கூறுங்கள். உங்கள் மதத்தைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை, அப்படியிருக்க நீங்கள் எப்படி அவ்வாறு கூறலாம்…” என்று கூறுகிறார்.

மம்தா பானர்ஜி

இந்த சம்பவத்தையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பா.ஜ.க-வின் பிரித்தாளும் அரசியல், இன்று வெட்கமின்றி எல்லை மீறியிருக்கிறது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை டர்பன் அணியும் ஒவ்வொருவரும் காலிஸ்தானிகள். நமது தேசத்துக்கான தியாகங்கள், அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்காகப் போற்றப்படும் நமது சீக்கிய சகோதர, சகோதரிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த துணிச்சலான முயற்சியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வங்காளத்தின் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதைச் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என்று பா.ஜ.க-வைச் சாடி பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.