உலகளவில் அமுல் பிராண்ட் முதலிடம் பெற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி விருப்பம்

அகமதாபாத்: அமுல் பிராண்டை உலகளவில் முதலிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் மோடேரா பகுதியில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஜிசிஎம்எம்எஃப்-ன் பொன்விழா கொண்டாட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசியதாவது:

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் அமுல் பிராண்ட் தற்போது உலகின் எட்டாவது மிகப் பெரிய பால் துறை நிறுவனமாக உள்ளது. நீங்கள் அனைவரும் இணைந்து அதை முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும். இந்த முயற்சியில் எனது அரசு உங்களுடன் உறுதுணையாக இருக்கும். இது, மோடியின் உத்தரவாதம்.

உலகளாவிய பால் துறையின் வளர்ச்சி 2 சதவீதம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தியாவில் பால்துறை 6 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருவது கவனத்துக்குரியது.

கூட்டுறவுத் துறையும் அரசும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு ஜிசிஎம்எம்எஃப் சிறந்த உதாரணம். இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாறியுள்ளதற்கு அந்த மாடலுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் பால் பயன்பாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. நெல், கோதுமை, கரும்பு உற்பத்தியின் மொத்த விற்பனையை விட இந்திய பால் துறையின் மொத்த விற்பனைரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

பெண்கள் இத்துறையில் முன்னணியில் உள்ளது மற் றொரு தனிச்சிறப்பு. பால் துறை யில் ஈடுபட்டுள்ள மொத்த பணி யாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். அவர்களின் பங்களிப்பால் தான் அமுல் புகழின் உச்சத்தை தொட முடிந்தது.

இந்தியாவை வளர்ந்த நாடாகமாற்ற பெண்களின் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் தோன்றிய அனைத்து பிராண்டுகளிலும் அமுல் மிகவும்பிரபலமானது. அமுல் தயாரிப்புகள் இப்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகின்றன. 36 லட்சம் விவசாயிகள், 18,000கூட்டுறவு சங்கங்களின் நெட்வொர்க் தினசரி ரூ.200 கோடி மதிப்புள்ள 3.5 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது.

முன்பிருந்த அரசு கிராமங்களின் தேவைகளை துண்டு, துண்டாக பிரித்துப் பார்த்தன. ஆனால் தற்போது சிறுவிவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கையை மேம்படுத்துவதே தனது அரசின் இலக்கு.

1 லட்சம் கோடி நிதி: கிராமப்புற பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். சிறு விவசாயிகளின் மேம்பாடு, கால்நடை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மீன்பிடித்தல், தேனீ வளர்ப்பு போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதில்தான் எங்கள் அரசின் முழு கவனமும் உள்ளது.

வயல்களில் சோலார் பேனல் நிறுவுதல், மாட்டுச் சாணத்தில் இருந்து உயிர் உரங்களை உற்பத்தி செய்யும் பயோ காஸ் ஆலைகள் உருவாக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு தொடர்பான உள்கட்டமைப்புக்காக ரூ.30,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

சபார் டெய்ரியின் நவீன பாலாடைக்கட்டி ஆலை ரூ.600கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனந்தில் உள்ள அமுல் டெய்ரியின் டெட்ரா பேக் ஆலை விரிவாக்கம், சாக்லேட் ஆலை உள்ளிட்ட பால் துறை தொடர்பான ஐந்து புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.