தமிழகம் முழுவதும் உள்ள மேய்க்கால், மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசின் 97 திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி: உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசின் 97 நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும், அதேநேரம் மாற்று இடங்களை மேய்ச்சலுக்கு ஒதுக்கி கொடுக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசின் மக்கள் நலத்திட்டம் சார்ந்த பொது பயன்பாடுகளுக்கோ அல்லது அந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ள மூன்றாவது நபர்களுக்கோ வகை மாற்றம் செய்து பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதில், மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்கள் என்ன நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்டதோ அந்தநோக்கங்களைத் தவிர்த்து வேறுஎந்த பயன்பாட்டுக்கும் அவற்றை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும், குறிப்பாக இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒருபோதும் அங்கீகரிக்கக்கூடாது எனவும் கோரப்பட்டிருந்தது.

அதன்படி மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை குடியிருப்புகளாக வகை மாற்றம் செய்யஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவேளை இந்த நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் அதற்காக மாற்று இடம் ஒதுக்கி கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், சிப்காட், ஐடி மற்றும் தொழில் பூங்கா, விளையாட்டுத் திடல், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் போன்ற அரசின் 97 நலத்திட்டப்பணிகள் சார்ந்த பொது நோக்கத்துக்காக இந்த மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அரசின் பல்வேறு மக்கள் நலப்பணிகள் சார்ந்த 97 திட்டங்களுக்கு மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்கள்தேவைப்படுவதால், அதற்குப்பதிலாக வருவாய் மற்றும் கால்நடைத்துறை சார்பில் கூட்டு ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டு மாற்று இடங்களை கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அரசுக்கு அதிகாரம் கிடையாது: அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேய்க்கால், மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசுக்கோ அல்லது மூன்றாவது நபர்களுக்கோ வகைமாற்றம் செய்ய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றாலும், பொது நோக்கத்துக்காக இந்த நிலங்களை அரசின் திட்டப் பணிகளுக்கு எடுத்துக்கொள்வதாக இருந்தால் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு தகுதியான இடங்களைக் கண்டறிந்து மாற்று நிலங்களை ஒதுக்கி கொடுத்த பிறகே இந்த நிலங்களைப் பயன்படுத்த அனுமதிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே அரசு அளித்துள்ள உத்தரவாதத்தின்படி மாற்று நிலங்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்ற 3 மாதங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகு இந்தநிலங்களை அரசின் 97 நலத்திட்டப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தகுதியான, சமமான மாற்று நிலம் ஒதுக்கப்படாமல் இந்த நிலங்களை அரசின் பணிகளுக்காக வகைமாற்றம் செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.