இண்டியா கூட்டணி உடன்பாட்டுக்கு முன்பாக கேஜ்ரிவாலுக்கு கைது மிரட்டல்: ஆம் ஆத்மி தகவல்

புதுடெல்லி: காங்கிரஸோ, ஆம் ஆத்மியோ கட்சியின் நலனை விட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளன என்று டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளர். டெல்லி, குஜராத் உட்பட 5 மாநிலங்களில் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்தை நடந்து வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு முதல் வெற்றி கிட்டியது. இப்போது 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு உடன்பாடு அடுத்த நேர்மறை நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறும்போது, “காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும், ஆரம்பத்தில் இருந்தே இண்டியா கூட்டணியில் தான் ஓர் அங்கம் என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவாக வலியுறுத்தி வந்தது.

இறுதியாக டெல்லி, ஹரியாணா, குஜராத், கோவா மற்றும் சண்டிகரில் இண்டியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் கட்சி நலனை விட, நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். டெல்லி, ஹரியாணா, குஜராத், மற்றும் கோவாவில் இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எல்லா இடங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. கூட்டணியில் இருந்து வெளியேறாவிட்டால், அமலாக்கத் துறையைத் தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வு முகமையும் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என்று கூறப்பட்டது. சிபிஐ திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பும், இன்னும் சில நாட்களில் கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது” என்றார்.

குஜராத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி பரூச், பாவ்நகர் என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்தநிலையில், பரூச் தொகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்படிருப்பது குறித்து குஜராத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த அகமது படேலின் மகன் ஃபைசல் அகமது படேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், “இதில் எனக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி இல்லை. இந்த முடிவு எடுக்கப்படக் கூடாது என்று நாங்கள் விரும்பினோம். ஆனால், இதைத்தான் கட்சித் தலைமை விரும்புகிறது என்றால் நானும் தொண்டர்களும் அதற்கு நிச்சயம் கட்டுப்பட்டு நடப்போம்.

நான் மீண்டும் ஒரு முறை காங்கிரஸ் தலைமையிடம் சென்று பேசுவேன். தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் இன்னும் நிறைய காலம் இருக்கிறது. காந்தி குடும்பமும் என் குடும்பம் போன்றதுதான். பரூச் தொகுதியுடனான படேல் கும்பத்தின் பிணைப்பினை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.