உச்சம் தொட்ட Raider 125… 7 லட்சத்திற்கும் மேல் விற்பனை – ஓரம்போன Apache!

TVS Raider 125: இந்திய சமூகத்தில் பாமர மக்கள் எப்போதும் தாங்கள் பயன்படுத்தும் அல்லது தங்களின் அன்றாடத்தில் மிகவும் பயனளிக்கும் ஒரு பொருளை கடவுளுக்கு நிகராக பார்ப்பார்கள். இந்தியர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள் என பொதுவாக கூறப்பட்டாலும் அவை எல்லா விஷயத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

குறிப்பாக, பைக், ஆட்டோ, லாரி, காரி, வேன் என எந்த வாகனத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், வாரம் ஒருமுறை அதை கழுவவது, நீண்ட தூரம் பயணிக்கும்போது டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து புறப்படுவது, ஆயுதப் பூஜையின் போது பூவும் பொட்டும் வைத்து வழிபடுவது என வாகனங்களையும் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணுவார்கள். 

ஒரு நடுத்தர வயது இளைஞன், தனக்கு மிகவும் பிடித்த பஜாஜ் பல்சரை வாங்கவும், அதனை வாங்கிய பின்னர் அதை பார்த்துக்கொள்ளும் விதமும், அவனின் வாழ்வில் பைக் ஏற்படுத்தும் மாற்றங்களையும், அதுசார்ந்த விஷயங்களையும் தனுஷ் – வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான பொல்லாதவன் படத்தில் பார்த்திருப்பீர்கள், இது உணர்ச்சிவசமான செயல் இல்லை என்பதை அதை பார்க்கும்போதே உங்களுக்கு புரிந்துவிடும் அல்லவா. 

அந்த வகையில், இந்தியர்கள் கார் போன்ற சொகுசு வாகனங்களை விட பைக்குகளை வாங்குவதில்தான் அதிக ஆர்வங்காட்டுகின்றனர். ஸ்போர்ட்ஸ் பைக்குகள், அதிக மைலேஜ் தரும் பைக்குகள், அதிக ரீ-சேல் மதிப்பை கொண்ட பைக்குகள் என ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை உள்ளது, எனவே பல நிறுவனங்கள் இந்திய சந்தையில் கோலோச்சி நிற்கின்றன. 

குறிப்பாக, இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் தொடங்கி ஸ்போர்ட்ஸ் பைக் வரை பல மாடல்களை விற்பனை செய்கின்றன. இந்தியாவின் கடைக்கோடி மூலை வரை டிவிஎஸ் தயாரிப்புகள் காலூன்றியிருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். TVS Excel Heavy Duty மொபட் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை மத்திய தர வர்க்கத்திடம் பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் அதன் ஸ்போர்ட்ஸ் பைக்கான TVS Raider 125 புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. 

அதாவது, TVS Raider 125 மாடல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 2 ஆண்டுகளில் இதன் விற்பனை மொத்தம் 7 லட்சத்தை கடந்திருப்பதாக சமீபத்தில் அந்நிறுவனம் தெரிவித்தது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி வரை 7 லட்சத்து 14 ஆயிரத்து 484 யூனிட் பைக்குகள் விற்பனையாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023-24 நிதியாண்டின் முதல் 10 மாதத்தில் (கடந்த ஏப்ரல் முதல் இந்த ஜனவரி வரை) மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 354 பைக்குகள் விற்பனையாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 388 பைக்குகளே விற்பனையாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, டிவிஎஸ் நிறுவனத்தில் இந்தாண்டில் அதிக விற்பனையாகும் டூ-வீலரில் TVS Raider 125 மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 

நடப்பு நிதியாண்டில் TVS Raider 125 பைக் 3 லட்சத்து 98 ஆயிரத்து 354 பைக்குகள் விற்பனையான நிலையில், TVS Jupiter – 6 லட்சத்து 99 ஆயிரத்து 613 பைக்குகளும், TVS XL – 3 லட்சத்து 99 ஆயிரத்து 877 பைக்குகளும் விற்பனையாகி உள்ளன. மேலும், TVS Raider 125 TVS Apache பைக்கையே ஓவர்-டேக் செய்திருக்கிறது. Apache கடந்த 10 மாதங்களில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 242 பைக்குகளே விற்பனையாகி இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.