பாஜக நிர்வாகி வீட்டில் கொள்ளை; கணவன் கைது, அவமானத்தில் மகன் தற்கொலை – போலீஸைக் குற்றம்சாட்டும் தாய்!

அருப்புக்கோட்டை அருகே முன்னாள் வி.ஏ.ஓ வீட்டில் கொள்ளையடித்த நபர், போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட நபரின் மகன், அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் துரை.பிரித்விராஜ். வி.ஏ.ஓ.வாகப் பணியாற்றிய இவர், தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க கட்சியில் இணைந்து தற்போது பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி இரவு, துரை பிரித்விராஜின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், பீரோவை உடைத்து அதிலிருந்து 2.60 லட்சம் ரூபாய் மற்றும் 2 ஸ்மார்ட் வாட்ச்சுகளை திருடிச் சென்றார்.

மாணிக்கம்

இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் துரை.பிரித்விராஜ் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அதன்படி, கொள்ளை சம்பவம் நடந்த அன்று, பிரித்விராஜின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்ததைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். போலீஸின் ரகசிய விசாரணையில், பிரித்விராஜின் வீட்டில் பணம் கொள்ளையடித்துச் சென்றது குறுஞ்சான்குளத்தைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 68) எனத் தெரியவந்தது. இதையடுத்து, குறிஞ்சான்குளத்திற்குச் சென்ற போலீஸார், நேற்று மாலை மாணிக்கத்தை சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், துரை பிரித்விராஜின் வீட்டில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மாணிக்கத்திடம் இருந்து பணம் மற்றும் இரண்டு ஸ்மார்ட் வாட்ச்சுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை நடத்திவந்த நிலையில், மாணிக்கத்தின் மகன் கர்ணன் (வயது 24) அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸ் விசாரணை நடத்துகையில், மாணிக்கத்தின் மகன் கர்ணன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு தகுதிக்கேற்ற வேலையை தேடி வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மாணிக்கத்தை திருட்டு வழக்கில் போலீஸ் கைதுசெய்ததைத் தாங்கமுடியாமல், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இது குறித்து வழக்கு பதிவுசெய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

காவல் நிலையம்

இந்த நிலையில் மாணிக்கத்தின் சார்பாக அவரின் மனைவி தேவி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக இன்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி மனுவில், “நேற்று மதியம் விசாரணைக்காக என்னுடைய கணவர் மாணிக்கத்தையும் மகன் கர்ணனையும் போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்களை கடுமையாக தாக்கி சித்ரவதைப்படுத்தியுள்ளனர். பின்பு வீட்டில் சோதனை செய்கிறேன் என்ற பெயரில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா நினைவகம் மற்றும் நகை அடகுச் சீட்டு முதலானவற்றை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்ற அதிகாரிகள், `மூன்று லட்சம் ரூபாய் தந்தால் உன்னை விட்டு விடுவோம், இல்லையெனில் ஜெயிலுக்குள் அடைத்து விடுவோம்’ என்று சொல்லி மிரட்டினார்கள்.

என்னுடைய கணவருக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இருப்பதால் அதற்கான மருந்து மாத்திரைகளை நேரத்திற்கு தர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதன்பேரில் என்னுடைய மகன் கர்ணனை மட்டும் வீட்டிற்கு அனுப்பி மருந்து மாத்திரைகளை எடுத்து வரச் சொன்னார்கள். நான் உட்பட எனது மகள்கள் இருவரையும் காவல் நிலையத்திலேயே உட்காரும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். இந்த நிலையில் மருந்து மாத்திரைகள் எடுத்துவர வீட்டிற்குச் சென்ற கர்ணன், அதன் பின் திரும்பி வரவே இல்லை. நெடுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகப்பட்டு எனது உறவினர் மூலமாக பார்க்கச் சொன்னேன். அப்போது வீட்டில் எனது மகன் கர்ணன் தூக்கில் பிணமாக இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், வீட்டிற்கு வந்ததும் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸூக்கு தகவல் தெரிவித்தோம். அதன்பேரில் வீட்டிற்கு வந்த போலீஸார் என்ன நடந்தது என எங்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது எனது மகன் சடலத்தின் அருகில்கூட எங்களை செல்லவிடவில்லை.

கலெக்டர் அலுவலகம்

அதிகாரிகள் எங்களை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே எனது மகனின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றுவிட்டார்கள். போலீஸார் அடித்து கொடுமைப்படுத்தியதால்தான் எனது மகன் இறந்துவிட்டான். எனது மகனின் உடலில் போலீஸார் அடித்து கொடுமைப்படுத்தியதற்கான கொடுங்காயங்கள் உள்ளது. அதை எனது உறவினர் செல்போனில் படம் பிடித்து வைத்திருக்கிறார். இதையறிந்த காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எனது உறவினரின் செல்போனை பிடுங்கி அதிலிருந்த போட்டோக்களை அழித்துவிட்டனர். எனது கணவர் மாணிக்கத்தை 3 லட்சம் ரூபாயைத் திருடியதாக ஒப்புக்கொள்ளும்படி கைதுசெய்து சித்ரவதை செய்கிறார்கள். மகன் உயிரிழந்துவிட்டான். எனது மகனின் இறப்புக்கு நீதி பெற்று தருவதோடு, போலீஸ் செய்யும் சித்ரவதைகளுக்கும் நியாயம் பெற்று தரவேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.