கவுகாத்தி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதியது.
அதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , டாம் கோலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் , டாம் கோலர் 18 ரன்களிலும், அடுத்து வந்த சாம்சன் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ரியான் பராக் , அஸ்வின் இருவரும் சிறப்பாக ஆடினர். நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். அதில் அஸ்வின் 19 பந்துகளில் 28 ரன்களும் , பராக் 34 பந்துகளில் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 144 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்து வீசிய சாம் கரன் , ராகுல் சாஹர், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 145 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் பரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பரப்சிம்ரன்சிங் 6 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ரூசோ 22 ரன்களும், சஷாங் சிங் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஜானி பேர்ஸ்டோ 14 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அடுத்ததாக கேப்டன் சாம் கரன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் ஜிதேஷ் சர்மா 22 ரன்களில் கேட்ச் ஆனார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் 38 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் சாம் கரன் 63 (41) ரன்களும், அசுடோஸ் சர்மா 17 (11) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.