அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் 15 வரை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் நியாய விலைக்கடைகளின் மூலம் விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறித்து புகார் எழுந்துள்ள நிலையில், வெளிச்சந்தைகளில் விற்கப்படும் அரிசியின் திடீர் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில் தற்போது அரிசியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தனிக்கவனம் செலுத்துவதோடு, நியாய விலைக்கடைகளின் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.