ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து… – ஒய்.எஸ்.ஷர்மிளா நாளை முக்கிய முடிவு

ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது. தொகுதி பங்கீடுகளும் முடிந்து, இரு கட்சித் தலைவர்களும் 99 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர்.

ஆனால், ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, தற்போதைய தெலுங்கு தேசம் – ஜனசேனா கூட்டணியுடன் இணையுமா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க, ஆளும் கட்சியான ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தனித்தே போட்டி என அறிவித்துள்ளனர்.

மேலும், மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களின் தொகுதிகளை, வேறு தொகுதிகளுக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஜெகன். இதனால் இக்கட்சியில் பயங்கரமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதன் காரணமாக இதுவரை 7 எம்.பி.க்கள், 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகளில் இணைந்து விட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து பல மாநகராட்சி மேயர்கள் முதற்கொண்டு, நகராட்சி, பஞ்சாயத்து, ஊராட்சி நிர்வாகிகள் வரை பலர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். தினந்தோறும் ஆளும் கட்சியில் ராஜினாமா படலம் தொடர்வதால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா களம் இறக்கி விடப்பட்டுள்ளார். வீழ்ச்சி அடைந்துள்ள காங்கிரஸை மீண்டும் தலை தூக்கி நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் இவர் இருப்பதால், தனது அண்ணன் என்றும் பாராமல் முதல்வர் மீது செய்யும் தீவிர விமர்சனங்கள் தற்போது ஆந்திர அரசியலில் ஆளும் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட விமர்சிக்காத பல விஷயங்களை ஷர்மிளா நெத்தியடியாய் விமர்சிக்கிறார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை ஷர்மிளா என்ன விமர்சனம் செய்யப் போகிறார்? என ஆளும் கட்சியினர் எதிர்பார்க்கும்படி செய்துவிட்டார் ஷர்மிளா.

ஆந்திர மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் ஒய்.எஸ்.ஷர்மிளா, நேற்று விஜயவாடாவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பதியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்தபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என பகிரங்கமாக அறிவித்தார்.

அது என்னவானது? ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, விசாகப்பட்டினத்தில் ரயில்வே வட்டம், போலாவரம் அணை திட்டம் ஆகிய எதுவுமே கொண்டு வரப்படவில்லை. இதே பாணியில் முதல்வர் ஜெகன் கூட, மக்களை ஏமாற்றி வருகிறார்.

ஆண்டு தோறும் ‘வேலை வாய்ப்பு காலண்டர்’ மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இது வரை கடந்த 5 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. ஆனால் இதுவரை யாரும் இது தொடர்பாக கேள்வி கேட்கவில்லை. அரசை எதிர்த்து போராட்டம் கூட செய்யவில்லை.

இவை அனைத்தும் நடக்க வேண்டுமெனில் அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சாத்தியம். மார்ச் 1-ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ள காங்கிரஸ் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து காங்கிரஸ் தரப்பில் மக்களுக்கு நான் வாக்குறுதி அளிக்க உள்ளேன். இவ்வாறு ஒய்.எஸ். ஷர்மிளா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.