பாஜகவினர்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என வீடு வீடாக பரப்புரை செய்ய மகளிரணிக்கு கனிமொழி அறிவுறுத்தல்

சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த நாடு என்னவாகும் என்பதை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறுங்கள். நடக்கவே நடக்காத விஷயத்தை நடந்ததாக சமூக ஊடகங்களில் பரப்புவதில் கைத்தேர்ந்தவர்கள் பாஜகவினர் என்று மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை (பிப்.29) அன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது: “தேர்தல் பணிகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்திட நிச்சயமாக நம்மால் முடிந்த அளவு மற்றவர்களால் செய்ய முடியாது. ஆனால் அதையும் தாண்டி, சின்ன கூட்டங்கள் உங்களுக்குத் தெரிந்த ஐம்பது பேர்களை அழைத்து மகளிர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துங்கள்.

பாஜக கைதேர்ந்த ஒரு திறமை வைத்திருக்கிறார்கள். அதுதான் பொய் பிரச்சாரம். மேலே இருந்து கீழே வரை பிரமாதமாக இதை செய்வார்கள். நடக்கவே நடக்காத விஷயத்தை நடந்ததாக திரும்பத் திரும்ப வாட்ஸ் அப்பில், சோஷியல் மீடியாவில் பரப்பிவிட்டுக் கொண்டே இருப்பார்கள்.நேற்றுகூட பிரதமர் பேசும்போது, நம்மை விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். தூத்துக்குடி துறைமுக விரிவாக்க திட்டத்தை அறிவித்தது 2012-13 பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான். 23 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் நம்மால் அதைத் தொடர முடியவில்லை.

பாஜக ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் நிதியமைச்சராக அருண் ஜேட்லி இருந்தபோது முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பாஜகவின் முதல் ஐந்து வருட ஆட்சி முடிந்துவிட்டது. அதன்பின் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள். அடுத்த தேர்தலும் வரப்போகிறது. இந்த நிலையில்தான் இப்போது அந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதனால் யார் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள், யார் அரசியல் செய்கிறார்கள், கொடுத்த வாக்குறுதியை யார் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

வாக்குறுதி கொடுத்த எல்லா திட்டத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்கிறார்கள். ஆனால் மதுரை எய்ம்ஸை இன்னும் கண்ணிலேயே காட்டவில்லை. அதேபோல தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையமான நைபர் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று நிதி செயலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். என் தொகுதிக்கான திட்டம் இல்லையென்றாலும் கூட வலியுறுத்தினேன். ஆனால் இன்னும் அது நடக்கவில்லை. இப்படி உங்கள் பகுதியிலும் நிறைய இருக்கும்.

அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுகிறோம் என்று சொன்னார்கள். வருடத்துக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறோம் என்றார்கள். ஆனால் தமிழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் கூட கரோனா ஊரடங்கு நேரத்தில் நடந்தே ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த கண்ணீர் கதைகளை நாம் பார்த்தோம். இப்படிப்பட்ட ஒரு ஆட்சிதான் நடந்திருக்கிறது.

இங்கே இருக்கிற பல பெண்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம். இதுவும் அதுவும் அரசியலாக கலக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கோயிலுக்கு போவதோ, சர்ச்சுக்கு போவதோ, மசூதிக்கு போவதோ, கடவுளை நம்புவதோ நம்பாததோ உங்கள் தனிப்பட்ட விஷயம். அதில் வேறு யாரும் குறுக்கிடுவதற்கோ, கருத்து சொல்வதற்கோ அவசியம் இல்லை.

இது மூடநம்பிக்கையா, இது தேவையா, இது பெண்களை முடக்கக் கூடிய நம்பிக்கையா, இது சாதியை வலியுறுத்தும் நம்பிக்கையா என்பது போன்ற விவாதங்கள் இருக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் தாண்டி கடவுளையே நான் தான் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு வரக் கூடியவர்களை நம்பக்கூடாது. மற்ற பெண்களுக்கு, இதை எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமை.

பெரும்பான்மை மக்களை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகையாக தருவது பாஜக அரசு அல்ல. நமது திமுக அரசு. பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட இந்து பெண்கள் படிக்க வேண்டும் என்று கல்லூரிகள் கட்டியதே மறைந்த முதல்வர் கருணாநிதிதான். பெரும்பான்மை இந்து மக்கள் படிக்க இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடியது திராவிட இயக்கமும் பெரியாரும்தான். எனவே, பெரியாரும் இந்துக்களுக்கு எதிரானவர் இல்லை.

நாம் படிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் அல்லவா, அவர்கள்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள். நாம் படிக்கக் கூடாது என்று நீட் கொண்டு வருகிறார்கள் அல்லவா, அவர்கள்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள். நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்று புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்து அனைவருக்கும் நுழைவுத் தேர்வு வைக்கப் போகிறேன் என்று சொல்கிறார்களே, அவர்கள்தான் அனைத்து மதங்களையும் சார்ந்த அனைத்து மக்களுக்கும் எதிரானவர்கள். இந்த நாட்டில் ஜிடிபி உயர்ந்துவிட்டது என்கிறார்கள். அதில் பணக்காரர்களின் வருமானம்தான் உயர்ந்திருக்கிறது. சாதாரண மக்களின் பொருளாதாரம் சறுக்கிக் கொண்டேதான் செல்கிறது. விவசாயிகளின் போராட்டம் இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது. மணிப்பூர் பிரச்சினை இன்றுவரை ஓயவில்லை. அங்கே செல்வதற்கு பிரதமருக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை.

அதேபோல தமிழகத்தில் சென்னையிலும் தென் மாவட்டத்திலும் மிகப்பெரிய மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை. இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக முதல்வர் இந்த வெள்ளத்தில் இடிந்துபோன வீடுகளுக்கு 4 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இதுபோல வேறு எந்த மாநில அரசும் செய்ததில்லை. விவசாயிகள், மீனவர்கள் என பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் உதவிக் கரம் நீட்டியது தமிழக அரசு. ஆனால், மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

நமது பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்களை சொல்லியிருக்கிறோம். எவற்றையெல்லாம் செய்திருக்கிறோம். என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மக்களை சந்தித்து நீங்கள் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தொடர்ந்து திமுக இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று ஒரு பிரச்சாரத்தை அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். திமுக யாருக்கும் எதிரியில்லை. அனைவரும் வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடிய அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற இயக்கம் திராவிட இயக்கம். இதை நாம் மக்களிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். இதுதான் நமது தலையாய பணி.

இதேபோல சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் இருந்தபடியே இன்னொருவர் வீட்டுக்கு போய் செய்திகளை சொல்கிற வழிதான் அவை. அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் சமூக தளங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும். நாம் வீடுகளுக்கு செல்லும்போது அந்த வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் பிரச்சினையை சொல்லலாம். அதை உடனடியாக நாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மக்கள் பிரதிநிதிகளிடம் சொல்லி அந்த பிரச்சினையை அப்போதே தீர்த்து வைக்க வேண்டும். இது அவர்களின் மனதில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எல்லாவற்றையும் விட தன்னம்பிக்கையோடு எங்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று தேர்தல் களத்தில் நாம் பணியாற்ற வேண்டும். ஏனென்றால் இந்தத் தேர்தலில் நாம் பெறப்போவது அரசியல் வெற்றி மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக பெண்கள் பெற்றிருக்ககூடிய உரிமைகள், வாய்ப்புகள், இந்த நாட்டின் அமைதியான எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான தேர்தல்.

மறுபடியும் இந்த ஆட்சி டெல்லியிலே உருவானால், முதலில் அடிபடுவது தமிழகம்தான். பெண்களின் உரிமைகள், தமிழர்களின் உரிமைகள், நமது கல்விதான். சாதாரண மக்களுக்கான பொருளாதார வளர்ச்சியே இருக்காது. இதை நீங்கள் புரிந்துகொண்டு மக்களுக்கும் புரியவைக்க வேண்டும். எங்கே போனாலும், திருமணம், கடைவீதி, பேருந்து பயணம், என அனைத்து இடத்திலும் நம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுங்கள். பாஜக ஆட்சி தொடர்ந்தால் என்னவாகும் என்பதை சொல்லுங்கள். நம்மால் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்ய முடியும்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.