Mari Selvaraj: `என் அப்பா மாதிரி திருமா அண்ணன் உட்காந்திருந்தார்; அவர் கைகளில்…' – மாரி செல்வராஜ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இளவந்திகை திருவிழா மற்றும் எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் ‘மாமன்னன்’ படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் ‘எழுச்சித் தமிழர்’ விருது பெற்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாரி செல்வராஜ் திருமாவளவன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. “என் படத்திற்காக முதல் முறை விருது வாங்கும்போது அந்த நேரத்திலிருந்து பரபரப்பில் என் குடும்பத்தினர் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. பாரதிராஜா சார்தான் விருதை வழங்கினார். அந்த சமயத்தில் எந்த மாதிரியான உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்றுக்கூட தெரியவில்லை. அந்த விருதை வாங்கிக்கொண்டு திரும்பும் போது என் அப்பா மாதிரி திருமா அண்ணன் உட்காந்திருந்தார். நான் முடிவு பண்ணவில்லை. அவர் மற்றவர்களுக்கு விருது கொடுப்பதற்காக அங்கு வந்திருந்தார். நான் விருது வாங்கிக்கொண்டு செல்லும்போது என் கால்கள் அவரை நோக்கிதான் சென்றது.

மாரி செல்வராஜ்

என் கை விருதை அவர் கையில்தான் கொடுத்தது. விருதை வாங்கிக் கட்டி அணைத்துக் கொண்டார். என் வாழ்வில் மிகச்சிறந்த தருணம் அது” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் ஒரு படத்திற்கான காட்சியை எழுதும்போது எந்த இடத்தில் கோபப்படுகிறேன், உணர்ச்சிவசப்படுகிறேன் என்பது எனக்கே நன்றாகத் தெரியும். ஆனால், அதை எப்படிப் படமாக்குவது, என்னால் அது முடியுமா என்ற கேள்விகள் என்னுள் எழும்.

உதாரணத்திற்கு  ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் அப்பா ஓடி வரும் காட்சி, ’கர்ணன்’ படத்தில் பேருந்தை உடைக்கும் காட்சி, ’மாமன்னன்’ படத்தின் இடைவேளைக் காட்சி ஆகியவற்றைச் சொல்லலாம். இந்தக் காட்சிகளை சென்சார் அனுமதிக்குமா, ரசிகர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். எந்த மாதிரியான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எனக்குள் பல கேள்விகள் எழும்.

மாரி செல்வராஜ்

அப்படி நான் யோசிக்கும் போதெல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிய வீடியோக்களைப்  பார்ப்பேன். என்னை விட அவரின் பேச்சில் அதிக கோபம், ஆவேசம், பாய்ச்சல் எல்லாம் இருக்கும். ஆனால் அதைவிட ஒரு நிதானம் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கு இருக்கும். அதனைக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.