Joshua: Imai Pol Kaakha Review: `நம்மை நோக்கி பாயும் தோட்டா!' – லாஜிக் சிக்கல்களும் கொஞ்சம் காதலும்!

அமெரிக்காவில் வழக்குரைஞராக இருக்கும் குந்தவியும் (ராஹி), கூலிக்குக் கொலை செய்யும் இன்டர்நேஷனல் கில்லரான ஜோஷ்வாவும் (வருண்) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பழகி, பின்பு காதலில் விழுகிறார்கள். தன் காதலை குந்தவியிடம் சொல்லும் போது, அதோடு தான் யார் என்ற உண்மையையும் சொல்கிறார் ஜோஷ்வா. இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத குந்தவி, அவரிடமிருந்து பிரிகிறார். சில ஆண்டுகளுக்குப் பின், உலகளவில் பிரபலமான குற்றவாளி ஒருவருக்கு எதிராக வழக்காடப் போகும் குந்தவியைக் கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவரைக் காக்க வேண்டிய அசைன்மெண்ட் தற்போது பாதுகாப்பு வீரராக இருக்கும் ஜோஷ்வாவிடம் வருகிறது. தன் காதலையும், தன் காதலியையும் காக்கக் களமிறங்கும் ஜோஷ்வா, இந்த இரண்டிலும் வென்றாரா என்பதை பதினெட்டாயிரம் துப்பாக்கி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டுப் பேசுகிறது கௌதம் வாசுதேவ மேனனின் ‘ஜோஷ்வா – இமை போல் காக்க’ திரைப்படம்.

Joshua: Imai Pol Kaakha

ஒரு ஸ்டைலிஷான கில்லராகத் தோற்றத்திலும், உடல்மொழியிலும் பாஸ் ஆகிறார் வருண். ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் முழுமையான பங்களிப்பை அளித்திருக்கிறார். ஆனால், உணர்வுபூர்வமான காட்சிகளையும், காதல் காட்சிகளையும் மெத்தனமாகக் கையாண்டு, ஒரு நடிகராக ஸ்கோர் செய்யத் தவறுகிறார். ஆங்காங்கே கௌதம் வாசுதேவ் மேனனின் வழக்கமான ‘ஹீரோயின்’ டச் உள்ள, ஸ்டைலும் சோகங்களும் கலந்த குந்தவி கதாபாத்திரத்தை ஓரளவிற்குக் கரைசேர்கிறார் ராஹி. ஆனாலும், மனதில் நிற்கும்படியான நடிப்பை எந்தக் காட்சியிலும் தரவில்லை. லிப் சிங்க் பிரச்னைகள் ஏராளம்!

ஆக்‌ஷன், உணர்ச்சிகரமான இடங்கள், பின்கதை எனப் பல அடுக்குகளைக் கிருஷ்ணா கதாபாத்திரம் கொண்டிருந்தாலும், குழப்பமான முறையில் எழுதப்பட்ட அக்கதாபாத்திரத்தை, குழப்பமான முறையிலேயே ஓவர் டோஸாக நடித்து நம்மையும் குழப்பியிருக்கிறார் கிருஷ்ணா. ராஜா கிருஷ்ணமூர்த்தி சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டி, முடிந்தளவிற்கு தன் நடிப்பால் அக்காட்சிகளைக் கரைசேர்க்கப் போராடியிருக்கிறார். கதாநாயகனுக்கு ‘உதவும் கரமாக’ வரும் திவ்யதர்ஷினி (டிடி), தாதாவாக மன்சூர் அலி கான், விசித்திரா, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் தாக்கம் தராமல் தோட்டாக்களுக்கிடையே தலை காட்டுகிறார்கள்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் காட்சிகளில் கைகொடுத்திருக்கிறது. ஆக்‌ஷன் இடிபாடுகளுக்கிடையே சிக்கித்தவிக்கும் திரைக்கதைக்கும் உணர்வுகளுக்கும் தேவையான சின்ன சின்ன ஷாட்டுகளை இன்னும் அழுத்தமான வகையில் நிதானமாகவே தொகுத்திருக்கலாம் படத்தொகுப்பாளர் ஆண்டனி.

Joshua: Imai Pol Kaakha

கார்த்திக்கின் இசையில் ‘டப்பாசு நேரம்’ மற்றும் ‘நான் உன் ஜோஷ்வா’ பாடல்கள் ‘பாதியளவு’ மட்டும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை மட்டும் சில ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதேநேரம் சில இடங்களில், அக்காட்சிகளோடு ஒட்டாமல் தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த படத்திலும் ஆறுதலான விஷயமாக இருக்கும் சண்டைக் காட்சிகளில் அதிரடியைக் காட்டியிருக்கிறார் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் யானிக் பென்.

கண்மூடித்தனமான காதல், எதையும் வெல்லும் கதாநாயகன் என ஒரு பக்கா ஆக்‌ஷன் படத்திற்கான ‘வழக்கமான’ ஒன்லைனோடு தொடங்குகிறது படம். ஆனால், அந்த ஒன்லைன் மீது கட்டப்பட்ட மொத்த திரைக்கதையும் மேலோட்டமாகவே இருக்கிறது. ஜிவிஎம்-மின் டெம்ப்ளட்டான காதல் வசனங்கள், அதற்குப் பின்னான காதல் பாடல், ஒரு நீண்ட ஆக்‌ஷன் காட்சி எனக் கனகாம்பரத்தையும் மல்லியையும் மாற்றி மாற்றி வைத்துப் பூக்கட்டுவது போல நகர்கிறது முதல்பாதி திரைக்கதை. செயற்கையான காதல் வசனங்கள், உயிர்ப்பில்லாத காதல் காட்சிகள், அலுப்பைத் தரும் ஆக்‌ஷன் என எந்தப் பூவுமே மணக்கவில்லை.

கதாநாயகியைக் கொல்ல போடப்பட்ட திட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி, அதைத் துப்பறியும் படலம், இருவருக்கும் காதல் வலுப்பெறும் தருணங்கள் எனத் திரைக்கதை இரண்டாம் பாதியில்தான் விரியத் தொடங்குகிறது. ஆனால், அதை அப்படியே மடக்கிப்போட்டுவிட்டு, கிருஷ்ணாவின் வருகை, அவருக்கான கதை, கதாநாயகனின் பின்கதை எனத் தேவையே இல்லாத கிளைக்கதைகளின் வழியாக, ‘யூ டேர்ன்’, ‘டபிள்யூ டேர்ன்’ என எல்லா டேர்ன்களையும் அடித்து, நம் தலையையும் சுத்த வைக்கிறது திரைக்கதை.

Joshua: Imai Pol Kaakha

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு ஒரு விளம்பரம் வருவது போல, ஒரு நிமிட வசனத்துக்கு ஒன்பது நிமிட சண்டைக்காட்சிகள் வருகின்றன. ஒரு கட்டத்தில், ஜிவிஎம் படமா இல்லை ஜிடிஏ கேமா என எண்ண வைக்கும் வகையில் கதாநாயகன் அத்தனை கொலைகளைக் கேஷ்வலாக செய்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவது போல, துப்பாக்கித் தோட்டாக்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.

இந்தத் தோட்டா வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த பார்வையாளர்களுக்கு, இரண்டாம் பாதியில் வரும் சில துப்பறியும் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தர முனைகின்றன. ஆனால், அதிலிருக்கும் ஒரு லாரி லாஜிக் ஓட்டைகள் அந்தச் சிறிய ஆசுவாசத்திலும் மண்ணள்ளிப் போடுகின்றன. கதாநாயகிக்கும் அவரின் தந்தைக்குமான உறவு, அவருக்கு நேரும் குழப்பங்கள், அவற்றுள் சிக்கிப் பரிதவிக்கும் மனநிலை என அந்தப் பகுதியை இன்னுமே செழுமைப்படுத்தியிருக்கலாம்.

கதாநாயகன் பணியாற்றும் ‘இன்டர்நேஷனல் லெவல்’ கொலைகார கூட்டத்தின் செயல்பாடுகள் என்ன, மெக்சிக்கன் போதைப்பொருள் கடத்தல் தாதாவின் பங்கு இந்தத் திரைக்கதையில் என்ன, திவ்யதர்ஷினியின் குறிக்கோள்தான் என்ன, கதாநாயகனின் ‘கொலை திருவிழா’வை காவல்துறை கண்டுகொள்ளாதா, இல்லை மொத்த தமிழ்நாடு காவல்துறையும் கிரிக்கெட் மேட்ச் பார்க்க விடுப்பில் சென்றுவிட்டார்களா என படத்தில் வெடித்த தோட்டாக்களின் எண்ணிக்கைக்கு நிகராகக் கேள்விகளும் நம்மைத் துளைக்கின்றன. காவல்துறையை விடுங்கள், காக்கிச் சட்டையின் வாடைகூட படத்தில் எங்குமே இல்லாதது என்ன லாஜிக்கோ!

Joshua: Imai Pol Kaakha

அழகான காதல் காட்சிகள், விறுவிறு ஆக்‌ஷன், அழுத்தமான கதாபாத்திரங்கள் எனத் தனக்கே உரித்தான எதுவுமே இல்லாமல், ஒரு ஒன்லைனையும், ஒரு டெம்போ ஆக்‌ஷன் காட்சிகளையும் மட்டும் வைத்துக்கொண்டு களமிறங்கி இருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ஆனால், நாயகியைக் காக்கும் வேலைக்கு இடையே, படத்தைக் காக்காமல் கைவிட்டு, தோட்டாக்களை மட்டும் தெறிக்கவிட்டிருக்கிறார் இந்த `ஜோஷ்வா – இமை போல் காக்க’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.