கலாஷேத்ரா வழக்கு: `போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்; ஆனால்…’ – வழக்கறிஞர் அஜிதா சொல்வதென்ன?!

கலாஷேத்ரா கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பெயர். பாலின வித்தியாசமின்றி பலரும் பாலியல் புகாரளிக்க, போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில், நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் அண்மையில் முக்கிய தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க, நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும், கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கலாஷேத்ரா

முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விரிவானக் கொள்கை வகுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த மாதம் 22-ம் தேதி இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், “கலாஷேத்ரா-வுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார்  விரும்பத்தகாதது மட்டுமன்றி, மிகவும் கவலைக்குரியது” எனக் குறிப்பிட்டார். சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான  குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, நீதிபதி கண்ணன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டுமென்றும், புகாருக்குள்ளான பேராசிரியரை நீக்க வேண்டும் என்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம். “இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர்களின் கோரிக்கைகள் நான்கு. பாலின சமத்துவக் கொள்கை அமைக்க வேண்டும். தங்கள் புகார்களை விசாரிக்க பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். கமிட்டியின் பரிந்துரைப்படி தவறிழைத்த ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பேரில் சட்டப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவையே. முதல் கோரிக்கையின்படி, கலாஷேத்ராவில் முதன்முறையாக பாலின சமத்துவக் கொள்கை வந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

அனிதா சுமந்த்

இந்தப் பாலின சமத்துவக் கொள்கை தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இது வெறுமனே பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு மட்டுமல்ல. தோலின் நிறம், உடல் பருமன், மதம், சாதி என அனைத்துரீதியான பாகுபாடுகளுக்கும் தேவை. இதைத்தான் மனுதாரர்கள் கோருகிறார்கள். ஆனால் அது இந்த தீர்ப்பில் நிறைவேற்றப்படவில்லை.

இன்னும் பல பொறியியல் கல்லூரிகளில், ஏன் பெண்ணியம் பேசிய பெரியாரின் பெயரில் உள்ள பெரியார் மணியம்மை கல்லூரியிலும்கூட இந்த நிலைதான் உள்ளது. இரண்டாவது கோரிக்கையாக இந்த தீர்ப்பின்படி, அமைக்கப்பட உள்ள இன்டர்னல் கமிட்டி அனைத்து விவகாரங்களையும் கவனிக்கலாம். ஆனால் மாணவர்கள் கோரியபடி பெற்றோர்களோ, ஆசிரியர்களோ இந்த கமிட்டியில் சேர்க்கப்படவில்லை.

வழக்கறிஞர் அஜிதா

இது ஒரு புறமிருக்க, பெண்களுக்கென்று நிரந்தரமாக ஒரு தனி கமிட்டி தேவை என்பதைத்தான் சட்டம் வலியுறுத்துகிறது. 29.03.2023 அன்று 3 ஆண் மாணவர்கள், ஆண் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் கொடுத்தனர். அதை தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த கமிட்டியே விசாரிக்கும் என தீர்ப்பு சொல்கிறது. பேராசிரியர் ஹரிபத்மன் பணி நீக்கத்தைப் பொறுத்தவரை, ஒரு நபரை வேலையை விட்டு நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அதற்கென ஒரு நடைமுறை உள்ளது. அவருக்கு மெமோ கொடுத்து, நடத்தை விதிகளின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுத்த பிறகுதான் பணி நீக்கம் செய்ய முடியும்.

அந்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டாரா அல்லது இன்னும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறாரா? அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டதா?  என்பதெல்லாம் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி கலாஷேத்ரா நிறுவனத்தின் உட் புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து நான் ராஜினாமா செய்தேன். அதற்கு காரணம், பாலியல் புகாருக்குள்ளான, பேராசிரியர் ஹரிபத்மன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுங்கள் என கல்லூரி நிர்வாகத்திற்கு மெயில் செய்தேன். ஆனாலும் அதை கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

குரு – சிஷ்ய பரம்பரை கல்வி முறையால் நிறைய பிரச்னைகள் இருப்பதாக மனுதாரர்கள் குறிப்பிடும்போது, கலாஷேத்ராவில் குரு-சிஷ்ய கல்வி முறையா அல்லது நவீன கல்விமுறையா? என்பதைப் பார்க்க வேண்டியதில்லை. ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையைக் கொண்டுதான் இந்த அமைப்பு இயங்குகிறது என்று தீர்ப்பில் பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். இந்த கல்வி அமைப்பை அப்படியே கொண்டு செல்வதற்கான ஒரு பயணத்தில் இந்த தீர்ப்பு ஒரு வெற்றிதான். இன்னும் கலாஷேத்ராவின் இணையதளத்தில் அந்த பாலின சமத்துவக் கொள்கை பதிவேற்றம் செய்யப்படவில்லை. மாணவர்கள் பார்வையில் படும்படி பாலின சமத்துவக் கொள்கை நகல்களை வைத்துள்ளோம் என கலாஷேத்ரா தரப்பில் கூறப்படுகிறது. அது எப்படி சாத்தியம் என புரியவில்லை.

கலாஷேத்ரா

கண்ணன் கமிட்டி கலாஷேத்ரா இயக்குநர்கள் குழு உருவாக்கிய உயர் மட்டக் குழு. அதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை. கண்ணன் அறிக்கை அதிர்ச்சிகரமாக உள்ளது என கூறுவதற்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்ற விஷயம் நடந்தது என்பது போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

குரு சிஷ்ய கல்வி முறையால் ஒரு ஜனநாயக வெளி இல்லாமல் இருந்தது. அதை மாணவர்களின் போராட்டம் சாதித்திருக்கிறது. இதனுடைய வெளிப்பாடுகள் மற்றும் தீர்வுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாணவர்கள் முன் வந்து பேசினால் மட்டுமே அதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த தீர்ப்பின் மூலமாக கேள்வி கேட்பதற்கான ஒரு ஜனநாயக வெளி திறந்திருக்கிறது” என்றார்.

கலாஷேத்ரா

இது தொடர்பாக கலாஷேத்ரா நிர்வாகத்தைச் சேர்ந்த பலரை தொடர்பு கொண்டோம். அழைப்பை நிராகரித்தனர். அழைப்பை ஏற்ற ஒரு சிலரும் “எங்களுக்கு எதுவும் தெரியாது. சமீப காலமா நாங்க கல்லூரி வளாகத்திற்குள் எதையும் பேசறதில்ல. மீண்டும் தொடர்பு கொள்ளாதிங்க” என அவசர அவசரமாக இணைப்பை துண்டித்தனர். அதனால் கலாஷேத்ரா நிர்வாகத் தரப்பு விளக்கத்தைப் பெற முடியவில்லை. அவர்கள் விளக்கமளிக்கும் பட்சத்தில், அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.