திடீரென நீக்கப்பட்ட செயலிகள்… தற்போது மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில்… முழு பின்னணி என்ன?

Indian Apps Delisted From Google Play Store: கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்ட் செயலிகளின் ஸ்டாரான, பிளே ஸ்டோரில் இருந்து 10க்கும் மேற்பட்ட செயலிகளை நேற்று நீக்கி உள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், நீக்கப்பட்ட செயலிகள் அனைத்தும் இந்திய நிறுவனங்களாகும். குறிப்பாக, பிரபலமான மேட்ரிமோனி நிறுவனங்களின் செயலிகள், ஸ்ட்ரீமிங் செயலிகள், டேட்டிங் செயலிகள், வேலைவாய்ப்பு குறித்த செயலிகள் ஆகியவற்றை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது. 

10 செயலிகள் நீக்கப்பட்டது குறித்து கூகுள் அதன் பிளாகில் பதிவிட்டுள்ளது. இருப்பினும் அது வெளிப்படையாக எந்தெந்த செயலிகளை நீக்கியுள்ளது என்பதை குறிப்பிடவில்லை. மார்ச் மாதத்தின் முதலான நேற்று கூகுள் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்த செயலிகள் சட்டப்பூர்வமானவைதான் என்றாலும் ஏன் இந்த செயலிகள் கூகுளில் இருந்து நீக்கப்பட்டன, அதன் பின்னணி, நீக்கப்பட்ட செயலிகள் இதுகுறித்து தெரிவித்த கருத்துகள் ஆகியவற்றை இதில் காணலாம். 

நீக்கப்பட்ட செயலிகள்

மேட்ரிமோனி நிறுவனமான பாரத் மேட்ரிமோனி மற்றும் அதன் துணை அமைப்புகளான தமிழ் மேட்ரிமோனி, தெலுங்கு மேட்ரிமோனி, மராத்தி மேட்ரிமோனி ஆகியவற்ரின் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளது. மேட்ரிமோனி செயலியில் இவை மட்டுமின்றி, Shaadi.com செயலியும் நீக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, டேட்டிங் செயலிகளும் நீக்கப்பட்டுள்ளன. QuackQuack மற்றும் Truly Madly போன்ற டேட்டிங் செயலிகளும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. Aha, Alt Balaji மற்றும் Stage போன்ற செயலிகள் கூகுள் நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், Kuku FM உள்ளிட்ட பாட்காஸ்ட் செயலியும் நீக்கப்பட்டுள்ளது . இவை மட்டுமின்றி, Nauri.com, Jeevsathi செயலி, 99 acres செயலி ஆகியவை நீக்கப்பட்டுள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கைகளுடன் இணங்காததால், இந்த செயலிகள்  பிளே ஸ்டோரில் இருந்து  நீக்கப்பட்டுள்ளன. இதற்கும முன்னரே இச்செயலிகளின் நிறுவனங்கள் நீதிமன்றத்தின் மூலம் இடைக்கால தடை பெற முடிவெடுத்தனர். இருப்பினும், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட மறுப்பு தெரிவித்தது. குறிப்பாக, பிற செயலிகள் இணங்கும் கூகுளின் பில்லிங் முறையை அந்நிறுவனம் செயல்படுத்த அனுமதி அளித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு பிறகும், இந்நிறுவனங்களுக்கு மூன்று வாரங்கள் கூடுதல் அவசமாக அளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, கூகுள் நிறுவனம் தனது பில்லிங் கொள்கை இணங்காததால் மாற்று வழிகளை மேற்கொள்ள அவகாசம் அளித்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மீண்டு வரும் செயலிகள்

குறிப்பாக, Info Edge நிறுவனத்தின் செயலிகளும் நேற்று நீக்கப்பட்டன. அதாவது, Naukri app, Naukri Recruiter, Naukrigulf Job Search App, 99acres and Shiksha உள்ளிட்ட செயலிகள் Info Edge நிறுவனத்துடையதாகும். கூகுள் நிறுவனத்தின் இந்த செயலால் கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. பல நிறுவனங்களின் சிஇஓக்கள் இதுகுறித்த தங்களின் வருத்தங்களையும் பதிவு செய்திருந்தனர். 

அதுமட்டுமின்றி, இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) இந்திய நிறுவனங்ளின் செயலிகளை நீக்கியது தவறானது என தனது கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், கூகுள் நிறுழனதம் அதன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளை மீண்டும் நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. 

தற்போது Shaadi.com செயலி மற்றும் Info Edge நிறுவனத்தின் சில செயலிகளும் தற்போது மீண்டும் பிளே ஸ்டோரில் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, Info Edge-இன் இணை நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனியும் X தளத்தில், “பல Info Edge செயலிகள் மீண்டும் பிளே ஸ்டோரில் வந்துள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் ஹிதேஷ் ஓபராய் மற்றும் நிறுவனத்தின் அனைத்து குழுவும் ஒரு சிறந்த பணியை மேற்கொண்டனர். இந்த குழு இதற்காக இரவு முழுவதும் விழித்திருந்து பணியாற்றினார்கள்” என குறிப்பிட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.