மீண்டும் வாரணாசியில் மோடி; `காஷ்மீர் டு கேரளா' – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 2014, 2019-ம் ஆண்டில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்ததுபோல் வரும் தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. அதற்கான அனைத்து திட்டங்களையும், செயல்பாடுகளையும் பா.ஜ.க தலைமை தீவிரமாகச் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மட்டும் 303 தொகுதிகளில் வென்றது. வரும் தேர்தலில் 370 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறது.

பா.ஜ.க கூட்டணியான என்.டி.ஏ-வுடன் சேர்ந்து 400-க்கும் அதிகமான இடங்களிலும் வெல்ல வேண்டும் என திட்டமிட்டிருக்கிறது. இந்த வேளையில், பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முதற்கட்ட வேட்பாளர் பெயர்களை அறிவித்தார். இந்தப் பட்டியலில் 195 பேரின் பெயர் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் 51 வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் 20 வேட்பாளர்கள், மத்தியப் பிரதேசத்தில் 24, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15, கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அஸ்ஸாமில் 11, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.

மேலும், டெல்லியில் 5, ஜம்மு – கஷ்மீரில் 2, உத்தரகாண்டில் இருந்து 3, அருணாச்சல பிரதேசத்தில் 2, கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டாமன் & டையூவில் தலா ஒருவர் என அந்த வேட்பாளர் பட்டியல் விவரிக்கிறது. இந்தப் பட்டியலில், 34 வேட்பாளர்கள் மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இந்த 195 வேட்பாளர்களில் 28 வேட்பாளர்கள் பெண்கள். 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இந்த முறையும் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் மன்சுக்பாய் மாண்டவியா போர்பந்தரிலும் போட்டியிடுகின்றனர். கேரள மாநிலத்தில் நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் வி.முரளீதரன் அட்டிங்கல் தொகுதியிலும், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்திலும் போட்டியிடுகின்றனர். டெல்லியில், சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜும் போட்டியிடுகிறார்.

மோடி, அமித் ஷா, பாஜக

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் பா.ஜ.க தலைவர் பிரக்யா சிங் தாகூர் போட்டியிட்ட தொகுதியில், அலோக் சர்மா போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் விதிஷா தொகுதியிலும், மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குணா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டிருக்கிறார். தற்போதைய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலம், கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.

(முழுமையான பெயர் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.