ADMK says Premalatha has 3 seats for DMK | தே.மு.தி.க.,வுக்கு 3 தொகுதி தான் பிரேமலதாவிடம் அ.தி.மு.க., கறார்

சென்னை : அ.தி.மு.க., – தே.மு.தி.க., இடையிலான கூட்டணி பேச்சு நேற்று துவங்கியது. மூன்று தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க., முன்வந்துள்ள நிலையில், பிரேமலதா நான்கு தொகுதிகள் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

இக்கட்சிகள் இடையே, 2019 லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டது. அப்போது, நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., படுதோல்வியை தழுவியது.

இதைத் தொடர்ந்து, 2021 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி அமைக்க, தே.மு.தி.க., தரப்பில் ஆர்வம் காட்டப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., புறக்கணித்தது.

மலர் துாவி மரியாதை

அதனால், அ.ம.மு.க., வுடன் இணைந்து, அந்த தேர்தலை தே.மு.தி.க., சந்திக்க நேர்ந்தது. அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பின், தே.மு.தி.க.,வுடன் பழைய நட்பை புதுப்பிக்க, அ.தி.மு.க., ஆர்வம் காட்டத் துவங்கியது; லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கும் முன்வந்துள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சு, சென்னையில் நேற்று துவங்கியது. அ.தி.மு.க., கூட்டணி பேச்சு குழு நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், அன்பழகன் ஆகியோர், நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றனர்.

தே.மு.தி.க., மாநில துணை செயலர்கள் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர், நால்வரையும் அழைத்து சென்றனர். இவர்கள் விஜயகாந்த் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், பொதுச்செயலர் பிரேமலதாவிற்கு சால்வை, பூங்கொத்துக்களை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வழங்கினர்.

இதையடுத்து, நிர்வாகிகளை வெளியேற்றி விட்டு, முன்னாள் அமைச்சர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தினார் பிரேமலதா. அப்போது, மூன்று தொகுதிகள் தருவதாக அ.தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், முந்தைய லோக்சபா தேர்தலை போலவே, நான்கு தொகுதிகள் வழங்க வேண்டும்; அதுவும், நாங்கள் விரும்பும் தொகுதிகளாக வேண்டும்; ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாகவும் உறுதிமொழி அளிக்க வேண்டும் என, பிரேமலதா தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.

30 நிமிட சந்திப்பு

மேலும், பேச்சு நடத்த குழு அமைக்கப்பட உள்ளது. அதன்பின், மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம் என்றும், அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் பிரேமலதா கூறியுள்ளார்.

ஆனால், ஒரே சந்திப்பில் தொகுதி பங்கீட்டை பேசி முடித்து, மூன்று தொகுதிகள் என்ற உடன்பாட்டில் கையெழுத்திட அழைக்கும் முடிவில் தான், அ.தி.மு.க., குழுவினர் சென்றனர்.

அவர்கள் எதிர்பாராத விதமாக பிரேமலதாவின் கோரிக்கைகள் அமைந்ததால், 30 நிமிட சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலுார் ஆகிய நான்கு தொகுதிகளை பிரேமலதா கேட்டுள்ளதால் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவுப்படி, பிரேமலதாவை சந்தித்தோம்; சுதீஷ் உடன் இருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இரண்டு பக்கம் குழு அமைத்த பின், மற்ற விஷயங்கள் குறித்து பேசுவதாக பிரேமலதா கூறினார். நேரில் சந்தித்ததை வைத்து, கூட்டணி குறித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.