Diamond watch seized from tobacco tycoons house | புகையிலை அதிபர் வீட்டில் வைர வாட்ச் பறிமுதல்

புதுடில்லி : உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புகையிலை நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், நிறுவன அதிபர்களில் ஒருவரான சிவம் மிஸ்ராவிடம் இருந்து, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வாட்ச் மற்றும் காதணி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை தலைமையிடமாக வைத்து பன்சிதார் புகையிலை நிறுவனம் செயல்படுகிறது. இதன் இயக்குனர்களாக கே.கே.மிஸ்ரா, அவரது மகன் சிவம் மிஸ்ரா உள்ளனர்.

பிரபல பான் மசாலா தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான புகையிலை மூலப்பொருட்களை விற்பனை செய்வதன் வாயிலாக பன்சிதார் புகையிலை நிறுவனம் வருவாய் ஈட்டுகிறது.

வருமான வரி மோசடி மற்றும் ஜி.எஸ்.டி., மோசடி ஆகியவற்றில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து வருமான வரித்துறையை சேர்ந்த 20 குழுவினர் நேற்று முன் தினம், ஐந்து மாநிலங்களில் உள்ள பன்சிதார் நிறுவன அலுவலகங்கள், இயக்குனர்களான கே.கே.மிஸ்ரா, சிவம் மிஸ்ராவின் வீடுகளில் ரெய்டு நடத்தினர்.

கணக்கில் வராத சொகுசு கார்கள், 4.5 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நிறுவனம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக கே.கே.மிஸ்ரா, சிவம் மிஸ்ரா வீடுகளில் சோதனை நடந்தது.

இதில் சிவம் மிஸ்ராவிடம் இருந்து கணக்கில் வராத, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கைக்கடிகாரம் மற்றும் காதணி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கணக்கில் வராத பணம், 7.5 கோடி ரூபாயும் சிக்கியது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.