IND vs ENG: தொடரை வென்றாலும் 5வது டெஸ்ட் மிகவும் முக்கியம்! ஏன் தெரியுமா?

India vs England: தரம்சாலாவில் மார்ச் 7ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.  இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்று வென்று இருந்தாலும் கடைசி டெஸ்ட் போட்டியும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் புள்ளிபட்டியலில் முன்னேற ஒவ்வொரு டெஸ்ட்டும் முக்கியமான ஒன்று.  இதனால், கடைசி டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள் அணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் இளம் வீரர் ரஜத் பட்டிதார் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை.  இதன் காரணமாக ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் படிதாருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் விளையாட உள்ளார் என்று கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

ஆனால், பிசிசிஐ படிதாருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவர் கடைசி டெஸ்டில் இடம் பெறுவார் என்றும், படிக்கல் மற்றொரு வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. “படிதாரிடம் நிறைய திறமை இருப்பதாகவும், அவர் ரன்களை அடிப்பதற்கு கால அவகாசம் தேவை என்பதை கருதி அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அணி விரும்புகிறது. இந்தியா ஏற்கனவே தொடரை வென்றுள்ளதால், அவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து முயற்சி செய்து பார்க்கலாம் என அணி விரும்புகிறது” என்று இந்திய அணி தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதே வேளையில், வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மும்பைக்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார்.  

5வது டெஸ்டில் சாதனை படைக்கபோகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரில் இளம் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல சாதனைகளை முறியடித்து வருகிறார். நான்கு டெஸ்ட் போட்டிகளில், இரண்டு இரட்டை சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் உட்பட ஏற்கனவே 655 ரன்கள் எடுத்துள்ளார். இது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த ஒரு இந்திய வீரரும் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இந்நிலையில், 45 ரன்கள் அடித்தால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார் ஜெய்ஷ்வால். டெஸ்ட் தொடரில் வரலாற்றில் இரண்டு பேட்டர்கள் மட்டுமே 700 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். 

முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் கிரஹாம் கூச் 1990ல் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் 752 ரன்கள் குவித்தார், மேலும் 2021-22ல் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் போது ​​ஜோ ரூட் 737 ரன்கள் எடுத்தார்.  இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு டெஸ்ட் தொடரில் 700 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த ஒரே வீரர் சுனில் கவாஸ்கர் மட்டுமே. 1971ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 774 ரன்களைக் குவித்தார், பின்னர் 1978-79 தொடரின் போது, ​​ஆறு போட்டிகளில் 732 ரன்கள் எடுத்தார்.  கவாஸ்கரின் 53 ஆண்டுகால சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு 120 ரன்கள் தேவை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.