Bank officer stole Rs 3 crore jewellery | ரூ.3 கோடி நகைகளை திருடிய வங்கி அதிகாரி

மும்பை: மஹாராஷ்டிராவில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிய அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவின் மும்பையை அடுத்த முலுந்த் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.

அதிர்ச்சி

தங்க நகைக்கடன் சேவைக்கான பிரத்யேக கிளையான இங்கு, மும்பையின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகின்றனர்.

இந்த வங்கியில் நகைக்கடன் வழங்கும் பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்த மனோஜ் மாருதி மஸ்கே, 33, கடந்த 27ம் தேதி முதல் சொந்த விடுப்பில் சென்றார். அவரின் பணி, மற்றொரு அதிகாரியான அமித் குமாருக்கு வழங்கப்பட்டது. கடந்த 27ம் தேதி முதல் பொறுப்பு அதிகாரியாக இருந்த அவர், அன்று வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகளை சரிபார்த்தார்.

கடந்த 26ம் தேதி வரை, 63 பேர் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்ததால், 63 பாக்கெட்டுகளில் நகைகள் இருக்க வேண்டும்.

ஆனால், வெறும் நான்கு பாக்கெட்டுகளில் மட்டும் நகைகள் இருந்ததை கண்ட அமித் குமார், இது குறித்து மனோஜிடம் கேள்வி எழுப்பினார்.

அந்த நகைகளை சொந்த தேவைக்கு பயன்படுத்தியதாகவும், அவற்றை ஒரு வாரத்திற்குள் திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமித் குமார், இது குறித்து வங்கி மேலதிகாரிகளிடம் கூறினார். நகைகள் திருடு போனதாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.

நம்பிக்கை மோசடி

இதையடுத்து, விடுமுறையில் சென்ற மனோஜ் வங்கிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், வங்கியில் அடகு வைக்கப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகளை அவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை ஒப்புக் கொண்டதை அடுத்து, நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மனோஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுஉள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.