Manjummel Boys: `கண்மணி அன்போடு…' படத்தின் தாக்கம்; கொடைக்கானலுக்குப் படையெடுக்கும் இளைஞர்கள்!

அண்மையில் வெளிவந்துள்ள மஞ்சுமெல் பாய்ஸ் மலையாள சினிமா கேரள ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதற்குக் காரணம் நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் வரும் `கண்மணி அன்போடு…’ என்ற பாடல் மற்றும் பாடல் காட்சியாகப்பட்ட இடமான கொடைக்கானலும் தான். கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் இளைஞர்களில் ஒருவர் குணா குகையில் உள்ள குழியில் தவறி விழுகிறார். அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டாரா என்பதே படத்தின் கதை.

குணா குகை பகுதி

தமிழகத்தில் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. ஆண்டுதோறும் காலநிலை இதமான நிலையில் இருக்கும். இதனால் இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

கொடைக்கானலில் டம் டம் பாறை, கோக்கர்ஸ் வாக், பைன் மரக்காடு, பில்லர் ராக் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் சென்றுவரத் தவறுவது இல்லை. இதில் முக்கியமான இடமாக பார்க்கப்படுவது குணா குகை. ஆங்கிலேயேர் காலத்தில் சாத்தானின் சமையலறை என இப்பகுதி அழைக்கப்பட்டிருக்கிறது. காரணம் அப்போதே பாறைகளுக்கு இடையே இருள் சூழ்ந்த குகைக்குள் ஆங்காங்கே குழிகள் இருந்ததாகவும், உள்ளே சென்று தவறி விழுந்தால் அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்பதால் ஆங்கிலேயேர்கள் அப்பகுதியை சாத்தானின் சமையலறை எனப் பெயரிட்டிருக்கின்றனர்.

குணா குகை பகுதி

இந்நிலையில் கடந்த 1991-ல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த குணா திரைப்படத்தில் வரும் `கண்மணி அன்போடு காதலன்…’ என்ற பாடல் காட்சி இந்தக் குகையில் தான் படமாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாது அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் இப்பகுதியில் தான் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பகுதி குணா குகை என மக்களால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அப்பகுதிக்கு குணா குகை என்ற பெயரே நிலைத்துவிட்டது.

பைன் மரக்காடுகள், பில்லர் ராக் பகுதிக்கு இடையே சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் பைன் மரக்காட்டிற்கு நடந்து சென்றால் குணா குகை பகுதியை அடைந்துவிடலாம். அங்கு பள்ளதாக்கு போன்ற பகுதியில் நுழைந்தால் பெரிய தூண் போன்ற பாறைகளுக்கு இடையே குகை இருக்கிறது. இதற்குள் 900 அடி ஆழம் கொண்ட குழி இருக்கிறது. இதில் இதுவரை 14 பேர் தவறி விழுந்து உயிரிழந்தாகவும், அவர்களின் உடல்களை கூட மீட்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’

மஞ்சுமெல் பாய்ஸ் படமும் 2006 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் தான். இந்நிலையில் இப்படம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கிறது.

இதன் காரணமாக கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுத்து வருகின்றனர். குணா குகை பகுதியில் செல்ஃபி எடுத்து கண்மணி அன்போடு காதலன் பாடலை கோரஸாக பாடி மகிழ்கின்றனர். எப்போதும் கோடை விடுமுறையின் போது தான் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

சுற்றுலா பயணிகள்

ஆனால் மஞ்சுமெல் பாய்ஸ் படத் தாக்கத்தால் கோடை விடுமுறைக்கு முன்னதாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி வனத்துறை மற்றும் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.