Doctor Vikatan: கஷாயத்துக்கு கட்டுப்படாத சளி… 3 வயதுக் குழந்தையின் ஜலதோஷத்துக்கு தீர்வு என்ன?

Doctor  Vikatan: எனக்கு மூன்று வயதில் ஒரு மகளும் நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சளித் தொந்தரவு விடாமல் இருந்து கொண்டே இருக்கிறது. மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருந்து கொடுத்து பார்த்தும்  சரியாகவில்லை.  வீட்டிலேயே கஷாயம் (தூதுவளை -வெற்றிலை- துளசி) வைத்துக் கொடுத்தும் குணம் தெரியவில்லை. இந்தப் பிரச்னைக்கு வேறு என்னதான் தீர்வு?
-Kadura Rathi, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

மூன்று- நான்கு வயதுக் குழந்தைகளுக்கு சளித்தொந்தரவு என்பது விட்டுவிட்டு அவ்வப்போது வருகிறது என்றால் அது குறித்துப் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. 

அதுவே, நீண்டநாள் சளியுடன், இருமல், காய்ச்சல் போன்றவையும் இருந்தால்தான் அது குறித்து பயப்பட வேண்டும். இருந்தாலும், உங்கள் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள மருத்துவரை அணுகி, குழந்தையின் பிரச்னைக்கு என்ன காரணம்  எனத் தெரிந்துகொள்வது நல்லது. பொதுவாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது இப்படிப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். 

வெளியிடங்களில் சாப்பிடுவது, கண்ட இடங்களிலும் தண்ணீர் குடிப்பது, ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் சாப்பிடுவது, ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரைக் குடிப்பது போன்ற விஷயங்களைக் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டாம்.  நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல தூதுவளை, துளசி, வெற்றிலை போன்றவற்றை கஷாயமாகச் செய்து கொடுக்கலாம். 

கற்பூரவள்ளி இலைகளை இடித்துச் சாறு எடுத்துக்கொள்ளவும். அந்தச் சாறு 5 சொட்டுகள் எடுத்து, 5 சொட்டுகள் தேன் கலந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.  கொள்ளு ரசம் வைத்துக் கொடுக்கலாம்.  முடிந்த அளவுக்கு வீட்டிலேயே இருக்கக்கூடிய இத்தகைய பொருள்களை மருந்தாகக் கொடுப்பதை முயற்சி செய்து பார்க்கலாம். 

கஷாயம்

சித்த மருத்துவத்தில் தேற்றான்கொட்டை லேகியம் என ஒன்று கிடைக்கும்.  சளி குறைந்தபிறகு, தினமும் இருவேளை கால் டீஸ்பூன் அளவுக்கு இந்த லேகியத்தை குழந்தைக்குக் கொடுத்து சப்பி சாப்பிடவைத்துவிட்டு, வாய்க் கொப்பளிக்கச் செய்ய வேண்டும்.  லேகியத்தின் இனிப்பு, பற்களில் ஒட்டிக் கொள்ளாமலிருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கு நெல்லிக்காய் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  முட்டையில் மிளகுத்தூள் தூவிக் கொடுக்கலாம்.  பாலில் மிளகுத்தூளும், மஞ்சள்தூளும் சேர்த்துக் குடிக்கச் செய்யலாம். ஒரு வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு சித்த மருத்துவத்தில் உரை மாத்திரை என ஒன்றைப் பரிந்துரைப்போம்.  உங்கள் குழந்தைக்கு வயதைப் பொருட்படுத்தாமல், 2 மாத்திரைகளைப்  பொடித்து, தேனில் குழைத்துக் கொடுக்கலாம். 

நெல்லிக்காய்!

குழந்தைக்கு வெறும் சளித் தொந்தரவு மட்டும்தான் இருக்கிறது, மற்றபடி ஆக்டிவ்வாக இருக்கிறது என்றால் எந்தப் பிரச்னையும் இருக்காது, பயப்பட வேண்டாம். அதுவே, குழந்தை சோர்வாக இருக்கிறது, உடல் எடை குறைந்துகொண்டே வருகிறது என்றால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம். குழந்தைக்கு எப்போதும் வெந்நீரே கொடுக்கவும். வெயில் காலத்திலும், காய்ச்சி ஆறவைத்த நீரை மட்டுமே கொடுக்கவும். மற்றபடி, நிறைய காய்கறிகள், பழங்கள் என சத்தான ஆகாரங்களைக் கொடுத்தாலே இந்தப் பிரச்னை சரியாகும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.