விராட் கோலி ஐபிஎல் தொடருக்கு வருவாரா…? – ஏபி டிவில்லியர்ஸ் சொன்ன புதிய தகவல்!

Virat Kohli, IPL 2024: இந்திய கிரிக்கெட்டில் பல வீரர்கள் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள், இருப்பினும் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகிய மூன்று வீரர்கள் பெற்ற உச்சம் என்பது தனித்துவமானது. சச்சின் டெண்டுல்கரின் கிளாஸ், தோனியின் மாஸ் என இரண்டையும் சேர்த்து கைக்கொண்டவர் விராட் கோலி எனலாம். சச்சின் டெண்டுல்கரை போல பேட்டிங்கல் தனித்துவமான ஸ்டைலை கொண்டிருக்கும் விராட் கோலி, கேப்டன்ஸியிலும் பல தனித்துவமான சாதனைகளை செய்திருக்கிறார். 

சச்சின் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தோனி சர்வதேச அளவில் ஓய்வுபெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர்கள் முழுமையாக இந்தியாவில் நடைபெறாத நிலையில், கடந்தாண்டுதான் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெற்றன. அந்த வகையில், தோனி நீண்ட நாள் கழித்து இந்திய மண்ணில் விளையாடுவதை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் மைதானங்களுக்கு படையெடுத்தனர். 

அதேபோல்தான் விராட் கோலிக்கும் விசாலமான ரசிகப் படை உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. எனவே, அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாக விலகினார். எனவே, ஜேம்ஸ் ஆண்டர்சன் – விராட் கோலிக்கு இடையிலான போரை காணாமல் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர் எனலாம். அந்த வகையில் விராட் கோலி வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

அதுகுறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் ஆர்சிபி அணி தரப்பிலும், விராட் கோலி அணி தரப்பில் இருந்தும் வரவில்லை. இன்னும் சில நாள்களில் ஒவ்வொரு அணிகளும் அதன் பயிற்சி முகாம்களை முழு வீச்சில் தொடங்கும் நிலையில், விராட் கோலி ஐபிஎல் போட்டி குறித்து என்ன முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும், விராட் கோலி ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தை பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் விராட் கோலியின் ஐபிஎல் பங்கேற்பு குறித்து ஆர்சிபியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது யூ-ட்யூப் சேனலில் பேசியபோது,”விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து எதுவும் உறுதியாகவில்லை. ஆர்சியின் கேப்டன் ஃபாப் டூ பிளேசிஸிடமோ, தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவரிடமோ இருந்து இதுசார்ந்த அறிவிப்பு வெளியாகலாம். 

விராட் கோலி தன்னுடனும், சில பேட்டர்களுடன் நேரம் செலவழிக்க என்னை அழைத்துள்ளார். இப்போதுக்கு நான் மும்பைக்கு வர்ணனை செய்ய மட்டுமே செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது என்ற தகவலை முதன்முதலில் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவித்தவர் ஏபி டிவில்லயர்ஸ்தான். அதன்பின், அவர் தனது பேச்சு குறித்து மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Video: குல்தீப் யாதவின் அதிசய பந்து… வாயை பிளந்த இங்கிலாந்து – என்ன ஆச்சு பாருங்க!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.