சுப்மான் கில் அப்படிப்பட்ட வீரர் இல்லை… இந்திய அணி மீது தவறு – தந்தை புலம்பல்!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG Test Series) அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாளிலேயே 218 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி 79 ரன்களை எடுத்தார். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிசந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

தொடர்ந்து, இந்திய அணி முதல் நாள் முடிவிலேயே 135 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. ஜெய்ஸ்வால் 57 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரோஹித் சர்மா – சுப்மான் கில் இணை இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை அதிரடியாக விளையாடி 171 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும், மதிய உணவு இடைவேளைக்கு முன்னரே ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து மிரட்டினர்.

படிக்கல் – சர்ஃபராஸ் மிரட்டல்

இருப்பினும், மதிய உணவு இடைவேளைக்கு பின் ரோஹித் சர்மா 103 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்திலும், சுப்மான் கில் 110 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். இதை தொடர்ந்து, சர்ஃபராஸ் கான் – தேவ்தத் படிக்கல் இணையும் அதிரடியாக விளையாடி 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. சர்ஃபராஸ் கான் 56 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதற்கடுத்து, ஜடேஜா, துருவ் ஜூரேல், அஸ்வின் ஆகியோர் ஆட்டமிழக்க, குல்தீப் யாதவ் – பும்ரா இணை இன்றைய தினம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதன்படி, இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்களை எடுத்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலையில் உள்ளது. குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடன் நாளைய ஆட்டத்தை தொடங்குவார்கள். இங்கிலாந்து அணி பந்துவீச்சில் சோயப் பஷீர் 4, ஹார்ட்லி 2, ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். z

சுப்மான் கில்லுக்கு மறக்க முடியாத இன்னிங்ஸ்

இந்த போட்டி சர்ஃபராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கலுக்கு மட்டுமின்றி சுப்மான் கில்லுக்கும் (Shubman Gill) சிறப்பானதாக அமைந்தது. சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமின்றி ஆண்டர்சனின் பந்தை அவரின் தலைக்கு மேலே சிக்ஸர் அடித்தது என சுப்மான் கில்லுக்கு இது மறக்க முடியாத இன்னிங்ஸ் ஆக அமைந்தது. மேலும், இந்த தொடரில் அவர் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்திய மண்ணில் கடந்த 7 ஆண்டுகளில் 3ஆவது இடத்தில் களமிறங்கி ஒரு தொடரில் 400 ரன்களை குவித்தவர் சுப்மான் கில் ஆவார். 

இந்நிலையில், சுப்மான் கில்லின் தந்தை லக்விந்தர் சிங் (Lukvinder Singh) போட்டியை காண தரம்சாலாவுக்கு வந்திருந்தார். லக்விந்தர் சிங் ஊடகம் ஒன்றில்,”(சுப்மான் கில் ஆட்டம் குறித்து) நீங்கள் திருப்தி அடைந்தால் அது உங்களை பொறுத்தவரை முடிந்துவிட்டது என அர்த்தம்.

அணிக்காக விளையாட வேண்டும்…

எப்போதும் எல்லாவற்றிற்கும் மேலாக, அணி வெற்றிபெற வேண்டும், அதற்கு வீரர்கள் பங்களிக்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சுப்மான் கில் 200 ரன்களை அடித்தார். நியூசிலாந்து அந்த போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்ததால், சுப்மான் கில்லின் 200 ரன்கள் அன்று போதுமானதாக இல்லை. உங்கள் அணி வெற்றி பெறாவிட்டால் மட்டும் இல்லை இதுபோன்று நடந்தாலும் பிரச்னைதான்.

அது தவறான முடிவு என்று நினைக்கிறேன். நீங்கள் வெளியே உட்கார்ந்து உங்கள் மீது அழுத்தத்தை மட்டும் எடுத்துக் கொள்வீர்கள். களத்தில் இறங்கி 10 பந்துகளை விளையாடினால் அழுத்தம் போய்விடும். நான் இந்த விஷயத்தில் அதிகம் தலையிடாமல் இருக்க முயற்சிக்கிறேன். நான் அவருடைய பயிற்சியில் என்னை ஈடுபடுத்துகிறேன், அவ்வளவுதான். 

கில் புஜாரா இல்லை

ஒன்-டவுண் வீரர் (நம்பர் 3 வீரர்) ஓப்பனரும் இல்லை, மிடில் ஆர்டர் பேட்டரும் இல்லை. இரண்டிற்கும் இடையில் சிக்கிக்கொள்பவர் அவர். அவருடைய ஆட்டமும் அதற்கு ஏற்றது இல்லை. அந்த இடத்திற்கு தற்காப்பு ஆட்டத்தை விளையாடக்கூடிய புஜாரா போன்ற ஒருவர், பொருத்தமானவராக இருப்பார். 

புதிய பந்து மூலம், நீங்கள் செட்டிலாக சில பந்துகளை கீப்பருக்கு விடலாம். புதிய பந்து பேட்டர்களுக்கு கடினமானது என்று கூறப்படுகிறது, ஆனால் பந்து வீச்சாளர்களுக்கும் அது சமளவில் கடினமானதுதான். 5-10 ஓவர்களுக்குப் பிறகு நீங்கள் பேட்டிங் செய்ய செல்லும்போது பந்துவீச்சாளர்கள் எந்த லெந்தில் பந்து வீச வேண்டும் என்பதைச் சரிசெய்துவிட்டார்கள்…” என தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். 

சுப்மான் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனராக அறிமுகமான நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் நம்பர் 3 இடத்தில் இறங்கினார். அதில் இருந்து முதல் 9 இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 140 ரன்களை மட்டுமே அடித்தது பலராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.