போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கை சந்தித்தது ஏன்? – டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும், ஜாபர் சாதிக்கை சந்தித்தது ஏன்? என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக போதை பொருள் ஒழிப்பு குழுஒன்று தற்போது செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பள்ளி, மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு முகாம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டிஜிபி சங்கர் ஜிவால் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். மேலும், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு புத்தகத்தையும், விழிப்புணர்வு குறும்படத்தையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் மற்றும் ஜாபர் சாதிக் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அவற்றுக்குப் பதில் அளித்து டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பது, போதை பொருள் பயன்பாடு மற்றும் தேவையை கட்டுப்படுத்துவது போன்ற 2 வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

இதனால், கஞ்சா பயன்படுத்துபவர்கள், போதை மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதை மாத்திரைகள் விற்பனையையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மருந்து கடைகள்மூலம் போதை மாத்திரைகள் விற்பனையைக் கண்டறிந்து 900-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்து கடைகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது போதை பொருள் ஒழிப்பு, அதன் பயன்பாடுமற்றும் தேவையை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் தமிழகம் முதல்மாநிலமாக உள்ளது.

மத்திய போதை பொருள் தடுப்பு போலீஸார், வருவாய் புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, கடலோரகாவல்படை போன்ற மத்திய அமைப்பினருக்கும் போதை பொருளை ஒழிப்பதில் பெரும் பங்குஉள்ளது. அவர்களுக்கு, தொழில்நுட்ப ரீதியிலான புலனாய்வு தகவல்கள், அதிகம் கிடைக்கும்.

பெரிய அளவில் போதை பொருள் கடத்தப்படுவதை அவர்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். தமிழக போலீஸாரை பொறுத்தவரை கடைசியாக தெருக்கள் வரை விற்கப்படும் போதை பொருளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறோம்.

இதனால்தான், தமிழக போலீஸார் அதிகளவில் போதை பொருளை கைப்பற்றிநடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதை பொருள் வழக்குகளில் 100 பேர் கைது செய்யப்பட்டால், அவர்களில் 80 பேருக்கு, நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தருகிறோம். அதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.

ஜாபர் சாதிக் விவகாரம்: நான் ஒரு அரசாங்க அதிகாரி. பொதுவான கருத்துகளை வெளியிடும் அரசியல்வாதிகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது. ஒரு நபர் (ஜாபர் சாதிக்) பிடிபட்டதை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைசொல்வது தவறு. குறிப்பிட்ட அந்த நபரை (ஜாபர் சாதிக்) நான் சென்னை காவல் ஆணையராக இருந்தபோது, சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளேன்.

சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு உதவி செய்த வங்கி உள்ளிட்ட அதிகாரிகளும், பல்வேறு நன்கொடையாளர்களும் அந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் அந்த நபர். தற்போது அந்த நபர்நன்கொடையாக கொடுத்த 10 சிசிடிவி கேமராக்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, 10 புதிய கேமராக்களை நாங்களே பொருத்தி உள்ளோம்.

அந்த நபரை கைது செய்வதற்கு மத்திய போதை பொருள் தடுப்பு போலீஸாரிடம் இருந்தோ, டெல்லி போலீஸாரிடமிருந்தோ தமிழக போலீஸாரிடம் எந்த உதவியும் கோரப்படவில்லை. டெல்லியில் 50 கிலோ போதை பொருள் (மூலப்பொருள்) தான் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் மதிப்பு ஒரு கிலோரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரைதான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியெனில்அதன் மதிப்பு என்ன என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனால், ரூ.2 ஆயிரம் கோடி என்று தவறான புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட அந்த நபர் மீது (ஜாபர்சாதிக்) சென்னை போலீஸில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டில் அவர் மீதுபதியப்பட்ட வழக்கில் விடுதலையாகி இருக்கிறார். போலி பாஸ்போர்ட் வழக்கில் 2021-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டதற்கான தகவல்கள் எதுவும் இல்லை. இவ்வாறு டிஜிபி கூறினார்.

முன்னதாக அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கூறும்போது, ‘‘போதை பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2022-ம் ஆண்டு 28,383 கிலோகஞ்சா கைப்பற்றப்பட்டு 14,934 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

2023-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 14,770 பேர் மீது மொத்தம் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23,364 கிலோ கஞ்சா, 0.953கி.கி. ஹெராயின், 39,910 மாத்திரைகள் மற்றும் 1,239 கி.கி. மற்ற போதைமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நடப்பு ஆண்டில், 2024 ஜனவரி வரை 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 799 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த3 ஆண்டுகளில் 1,501 போதைப் பொருள் குற்றவாளிகள் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளனர்’’ என்றார்.

வெடிகுண்டு மிரட்டல்கள் மீது விசாரணை: பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் வாயிலாக விடுக்கப்பட்டன. 26 முறை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து ஒரே ஐ.டி மூலம் மிரட்டல்கள் வந்துள்ளன.

ஒரே நபர்தான் அந்த மிரட்டல் தகவல்களை அனுப்பி உள்ளார். அந்த மின்னஞ்சல் ஐ.டி.யை முடக்க கடிதம் எழுதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மிரட்டல் அனுப்பிய நபரை கைது செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டிஜிபி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.