Street Dog: தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ரூ.20 கோடி ஏன்? விளக்கும் கால்நடை மருத்துவர்!

2007-ம் ஆண்டு தெருநாய்களை கொல்லக் கூடாது. அதற்குப் பிறப்பு கட்டுப்பாடு (Animal Birth Control) மட்டுமே செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடை செய்யப்பட்டு வருகிறது.

தெருநாய்

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநகராட்சியிலும் எவ்வளவு தெருநாய்கள் இருக்கின்றன என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தெருநாய்கள் குட்டி போடுவதைக் குறைப்பதற் காகவும் ரேபிஸ் நோய்களைத் தடுப்பதற்காகவும் ABC மற்றும் ARV (animal rabies control) இரண்டும் போடப்பட்டு வருகிறது.

தெருநாய்களுக்குக் கருத்தடை செய்வது எந்த வகையில் சாத்தியம், அது எவ்வாறு நடக்கிறது என்பதை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் தனபாலிடம் பேசியபோது, “முதலில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களையும் அதன் எண்ணிக்கைகளையும் கண்டறிந்து  மாநகராட்சி மற்றும் ப்ளூ கிராஸ் அமைப்புகளுடன் இணைந்து நாய்களுக்குக் கருத்தடை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு மீண்டும் தெருக்களில் விடப்படும். 

கடந்த காலங்களில் தெருநாய்களால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெருநாய்களின் கருத்தடைக்கு 20 கோடி நிதி வழங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய வேண்டிய கட்டாயமான சூழ்நிலை உள்ளது. கருத்தடை செய்யாமல் விட்டால் தெருநாய்களை இங்கு அதிகமாகக் கருணைக் கொலைதான் செய்வார்கள். அது சட்டத்துக்கு எதிரானது. அதனால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அவசியமான ஒன்றாகும்.

கருத்தடை செய்வதால் நாய்களுடைய எண்ணிக்கை குறைகிறது. மாதத்துக்குக் குறைந்தது 1,500 நாய்களுக்குக் கருத்தடை செய்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அப்படியில்லாமல்  மாதத்துக்கு 100 நாய்கள் வீதம் கருத்தடை செய்தால் அது பயனளிக்காது.

ஒவ்வொரு மாநகராட்சியிலும், நகராட்சியிலும் நாய்களுக்கான கருத்தடை மையம் இருக்கிறது. அங்கு கால்நடை மருத்துவர்களை வைத்து இந்த அறுவைசிகிச்சை செய்து கொண்டு இருக்கின்றனர். போதுமான நிதி இல்லாததால் அது சரிவர செயல்படாமல் இருந்து வந்தது. இந்தத் தொகை அதற்கு பெரிய உதவி செய்யும். சென்னை மாநகராட்சி மற்றும் ப்ளூ கிராஸ் இந்தியாவும் இணைந்து 2007-ல் இருந்து தொடர்ந்து நாய்களுக்குக் கருத்தடை செய்து வருகிறது. திருச்சி ஈரோடு மாதிரியான மாவட்டங்களில் இப்பொழுது தொடங்கியுள்ளது. 

சென்னை மாநகராட்சி

ABC (Animal Birth Control) முறை முதலில் ப்ளூ கிராஸிடம் பணம் வாங்கிக் செய்துகொண்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தொடங்கிய பின்னர், அரசிடம் தனியாக நிதி பெற்று இதைச் செய்து வருகிறது.

இந்த அதிகப்படியான நிதி எல்லா நாய்களுக்கும் கருத்தடை செய்வதற்கு சாத்தியம் இருக்கிறது. இப்போது ஊட்டியில் 10 சதவிகிதம் கருத்தடை செய்து ரேபிஸ் இல்லாத ஊராக ஊட்டியை மாற்றியுள்ளோம். கருத்தடை செய்வதால் நாய்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்காது.

நாய்கள் கருத்தடை ஊசி (சித்திரிப்பு படம்)

கருத்தடையால் நாய்களின் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். ரேபீஸ் பரவுவதை இந்தக் கருத்தடை மூலம் குறைக்க முடிகிறது. இதனால ரேபீஸ் மூலம் மனித உயிரிழப்புகளையும் தடுக்க முடிகிறது.

நாய்களுக்குக் கருத்தடை செய்து அதை 7 நாள் பாதுகாப்பாக வைத்து அதே தெருக்களில் விட வேண்டும். ஒரு நாய்க்கு இந்தக் கருத்தடை செய்வதற்கு ரூ.1,050 அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி இணைந்து அதன் உட் தொகையில் 50% சதவிகிதமும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் 50% சதவிகிதமும் கொடுக்கிறது.

கருத்தடை செய்தால் கண்டிப்பாகத் தெருநாய்கள் மனிதர்களை தாக்குவதைக் குறைத்து விட முடியும். கருத்தடை செய்வது இனப்பெருக்கத்தை அழிப்பதற்காக மட்டுமே தவிர, இனத்தை அழிப்பதற்கு அல்ல.

தெருநாய்கள்

கொரோனா காலகட்டத்தில்தான் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து நாய்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால்தான் இந்த முறை சட்டப்பேரவையில் 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

– நவலட்சுமி அண்ணாதுரை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.