`டாடி டாடி ஓ மை டாடி' பாடல் புகழ் `மாஸ்டர் சுரேஷ்' என்கிற சூரிய கிரண் காலமானார்!

பாக்யராஜின் `மௌன கீதங்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பேசப்பட்ட மாஸ்டர் சுரேஷ், அதன் பின் 200 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன் பின் தன் பெயரை சூரிய கிரண் என மாற்றிக் கொண்டார். தெலுங்கில் படங்கள் இயக்கி வந்தார். தமிழில் வரலட்சுமி நடிப்பில் ‘அரசி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இன்று அவர் உடல்நல பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48.

தமிழ் சினிமாவின் 1980 காலகட்ட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றவர் மாஸ்டர் சுரேஷ். ‘கல்லுக்குள் ஈரம்’, ‘மௌன கீதங்கள்’, ‘கடல் மீன்கள்’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘வேலைக்காரன்’ என தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் இயக்குநரான பின்னர் தன் பெயரை சூரிய கிரண் என மாற்றினார். தெலுங்கில் 2003ல் வெளியான ‘சத்யம்’, ‘பிரமஸ்தரம்’, ‘ராஜூ பாய்’ என பல படங்களை இயக்கினார். தெலுங்கில் வெளியான ‘பிக்பாஸ்’ சீசன் 4-ல் பங்கேற்றார்.

குழந்தை நட்சத்திரமாக..

பின்னர் தமிழில் படம் இயக்க விரும்பினார். வரலட்சுமி நடித்த ‘அரசி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தா ராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி, சிவா மதன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

இந்நிலையில் சூரிய கிரண் இன்று காலை சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் உடல்நிலை பாதிப்பின் காரணமாக இறந்திருக்கிறார். அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என்கிறார்கள். சின்னத்திரையில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.