CAA: தேர்தலுக்கு முன்பு அமல்படுத்திய பாஜக… குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வரையறை என்ன?

மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாள்களே இருக்கும் சூழலில், நான்கு ஆண்டுகளாக விதிகள் வகுக்கப்படாமல், அமல்படுத்தப்படாமலிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு இன்று நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறது. முன்னதாக, 2019-ல் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், அதே ஆண்டில் டிசம்பரில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றியது. இந்தச் சட்டமானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்த இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறித்தவம், சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குகிறது.

CAA – குடியுரிமை திருத்தச் சட்டம்

இதற்கு முன்னிருந்த குடியுரிமைச் சட்டத்தில், குறிப்பிட்ட மதத்தினருக்கே குடியுரிமை என்று வகுக்கப்படவில்லை. இந்தியாவில் பிறந்திருந்தாலோ அல்லது குறைந்தது 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தாலோ குடியுரிமை வழங்கப்படும்.

ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறி குறைந்தது 5 ஆண்டுகள் இங்கு வசித்திருந்தாலே குடியுரிமை வழங்கப்படும். ஆனால், இங்குதான்… முஸ்லிம் அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று பா.ஜ.க அரசு எங்கும் குறிப்பிடவில்லை.

CAA – குடியுரிமை திருத்தச் சட்டம்

அதற்கு இவர்கள், `பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். மற்ற மதத்தினர் சிறுபான்மையினராக இருக்கின்றனர். அதனால்தான், மதரீதியாகத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறித்தவம், சீக்கியம் ஆகிய மதத்தவருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. மேலும், இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதால் இங்கிருக்கும் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படாது’ என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

அதோடு, `தமிழ்நாட்டு முகாம்களில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்கும் வகையில் இலங்கையை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை’ என்ற கேள்விக்கு, `அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வாழவே சேர்க்கப்படவில்லை’ என்றும் கூறுகிறார்கள். மேலும், வங்கதேசத்திலிருந்து அதிகப்படியாக மேற்கு வங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நுழையும் முஸ்லிம்கள் அல்லாத அகதிகள் மட்டும் இந்தச் சட்டத்தின்மூலம் குடியுரிமை பெறுவது வங்கதேசத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்க வழிவகுக்கும் என்ற அச்ச உணர்வும் இருக்கிறது.

CAA-NRC-NPR

இத்தகைய காரணங்களால். இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடளவில் அப்போது போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தில் போராட்டக்காரர்கள்மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். அப்படியே படிப்படியாக சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள் குறைந்து, எதிர்ப்புக் குரலாக தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. இதற்கிடையில், சி.ஏ.ஏ-வை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளை வகுப்பதில் நாள்களை நான்கு ஆண்டுகளாக ஒன்பது முறை பா.ஜ.க தள்ளிப்போட்டது.

இந்த நிலையில், `மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே சி.ஏ.ஏ அமல்படுத்தப்படும்’ என்ற அமித் ஷாவின் சமீபத்திய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு இதை அமல்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி, குடியுரிமை பெற விரும்புபவர்கள் எளிதாகக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தால் இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி – அமித் ஷா

CAA – சுருக்கமாக:

இந்திய குடியுரிமை கோரும் அகதிகள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டவராக இருக்க வேண்டும்.

இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறித்தவம், சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

2014, டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியாவுக்குள் நுழைந்து குறைந்து ஐந்தாண்டுகள் இங்கு தங்கியிருக்க வேண்டும்.

அஸ்ஸாமின் கர்பி ஆங்லாங், மேகாலயாவின் கரோ மலைகள், மிசோரமின் சக்மா மாவட்டம் மற்றும் திரிபுராவில் உள்ள பழங்குடியினர் பகுதிகள் உட்பட, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகளுக்கு இந்தச் சட்டம் விலக்கு அளிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.