`தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர நாங்கள் முட்டாள்கள் அல்ல'-கடுகடுக்கும் சிவக்குமார், மௌனம் காக்கும் திமுக

`தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கும் அளவுக்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல’ என கர்நாடக மாநில காங்கிரஸ் துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், `சொந்த மாநிலத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை நிலவும்போது, அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையிலிருந்து காவிரி நீர் திறந்து விடப்படுகிறது’ எனக் குற்றம்சாட்டி, கர்நாடக எதிர்க்கட்சிகள் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் தட்டுப்பாடு – பெங்களூரு

இதற்கு விளக்கம் அளித்த டி.கே.சிவக்குமார். “எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுவரை தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறோம் என்ற தரவை மிக நுணுக்கமாகப் பதிவுசெய்திருக்கிறோம். இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், இலக்கை சென்றடைய நான்கு நாள்களாகும். அதேசமயம், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும் அளவுக்கு இந்த அரசாங்கத்தில் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!” என ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஏற்கெனவே கடந்த மாதம், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, “காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம். மேக்கேதாட்டூ அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அணை கட்டப்படவிருக்கும் பகுதியில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி, வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வுப் பணி உள்ளிட்டவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. மத்திய அரசிடம் தேவையான அனுமதி பெறப்பட்டதும் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, மேக்கேதாட்டூ அணை கட்டிமுடிக்கப்படும்!” எனப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இந்த சூடே தணியாத நிலையில், தற்போது இருக்கின்ற நீரையும் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட மறுக்கிறது கர்நாடகா.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் மற்றும் கர்நாடக பா.ஜ.க தலைவர் சி.டி.ரவி ஆகியோரின் கடும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதில் முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது. இது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளில் தேசிய கட்சிகளின் வரலாற்று இரட்டை நிலைப்பாட்டை, பாசாங்குத்தனமான தன்மையையே பிரதிபலிக்கிறது” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், “தி.மு.க அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து தொடர்ந்து ஊமையாக இருந்து வருகிறது. தமிழக மக்களின் உரிமைகளை உறுதி செய்வதில் அ.தி.மு.க தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி முழுவதையும் பாலைவனமாக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து, காவிரி அன்னை மீதான நமது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

காவிரி நீர்

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க இந்த விவகாரம் குறித்து எந்த பதிலும் இதுவரையில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் வரும் மார்ச் 21-ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 93-வது கூட்டம் புதுச்சேரியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காவிரி நீரைப் பகிரிந்துகொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எட்டப்படும் என அனைத்து மாநில விவசாயிகளும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.