பள்ளியிலேயே ஆதார் பதிவு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பள்ளிகளிலேயே மாணவர்க ளுக்கு ஆதார் அட்டை புதிதாக பதிவுசெய்வது, புதுப்பிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்விதுறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை:

ஆதார் மையங்கள் உருவாக்குவது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவி மற்றும் ஊக்கத் தொகைகள், பயனாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்கு மாணவர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம் தேவை. புதிய வங்கிகணக்கு தொடங்க ஆதார் எண் அவசியமாகிறது எனவே, அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆதார் அட்டை வழங்குவது அவசியம்.

பள்ளிகளில் ஆதார் பதிவை பொருத்தவரை, 5 வயது வரையிலான புதிய பதிவுகளை பெற்றோரின் ஆதார் விவரங்கள், கைரேகை அங்கீகாரத்துடன் பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம். குழந்தைகள் 5 வயதை அடைந்த பிறகு பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்யவேண்டும்.

15 வயதுக்கு பிறகு நிலையான பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இப்பணிகளையும் பள்ளிகளில் மேற்கொள்ளலாம். அதேபோல, பிறந்தது முதல் பதிவு செய்யாத 7-15 வயது பிள்ளைகளுக்கான பதிவுகளையும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஆதார் பதிவாளராக மாநில திட்ட இயக்குநர் செயல்படுவார். மாவட்ட திட்ட அலுவலகத்தில் உள்ள உதவிதிட்ட அலுவலர் பொறுப்பு அதிகாரியாக செயல்படுவார். ஆதார் தரவு உள்ளீட்டாளர் பள்ளிக்கு செல்லும்முன்பு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் மூலம் தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு தகவல் தெரிவிப்பார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனது வட்டாரத்தில் நடைபெறும் ஆதார் தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைப்பார். பள்ளிகளில் ஆதார் எண் பெறப்பட்டதும் அதை எமிஸ் தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்வது இவரது பொறுப்பு.

வட்டார அளவில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு, புதுப்பித்தல் பணி தொய்வின்றி நடைபெற திட்டம் வகுப்பது வட்டார கல்வி அலுவலரின் பணி. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் பதிவு, புதுப்பித்தல் மேற்கொள்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆதார் பதிவு மேற்கொள்ளும் முகமையாக எல்காட் நிறுவனம் செயல்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.