மோடியா? தீதியா? – பிரச்சாரத்தை தொடங்கியது மம்தா கட்சி

வங்கத்துக்கு எதிரான கட்சி பாஜக என்ற முழக்கத்தை முன்வைத்து மோடியா? தீதியா (மம்தா) என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது பிரச்சாரத்தை நேற்று தொடங்கியுள்ளது. 2019 தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக ஆழமாக காலூன்ற தொடங்கியுள்ளது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது.

இது, கிழக்கு மாநிலங்களில் அக்கட்சிக்கு அதுவரை கிடைத்திராத மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. 2021 சட்டப் பேரவை தேர்தலிலும் முக்கிய எதிர்க்கட்சிகளான சிபிஎம் மற்றும் காங்கிரஸை ஓரம்கட்டிவிட்டு பாஜக 77 இடங்களை பிடித்தது. இதையடுத்து, பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

அப்போது முதல் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தாமல் அடுத்தவரை குறைசொல்லியே மம்தா ஆட்சி நடத்தி வருவதாக பாஜக குற்றம் சாட்டுகிறது.
இந்த சூழ்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதில், மேற்கு வங்க மாநில மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்ற முழக்கத்தை முன்னெடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

மம்தாவுக்கு அடுத்தபடியாக கட்சியில் இரண்டாவது இடத்தில் உள்ள அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளதாவது: 2024 தேர்தல் வங்க மக்களுக்கும் (திரிணமூல்), வெளிநபர்களுக்கும் (பாஜக) இடையில்தான் போட்டி. முன்பெல்லாம் திருடர்கள் சிறைக்குப் போனார்கள். இப்போது பாஜகவில் தஞ்சம் அடைகின்றனர். இதுதான் மோடியின் உத்தரவாதம்.

மறுபக்கம் ஏழைப் பெண்கள் இன்னும் தகர கூரையின் கீழ்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஹவாய் செருப்பைத்தான் அணிகிறார்கள். மோடியின் ஆட்சியில் இதுதான் நிலைமை. எந்தவித மாற்றமும் இல்லை. இந்த நிலையில், வங்கத்துக்கு யார் வேண்டும். மோடியா அல்லது தீதியா (மம்தா)?. வங்கத்தை ஆள்வது இந்த மண்ணின் மைந்தரா அல்லது அந்நியர்களா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வங்க எதிர்ப்பு சக்திகளை இந்த மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டதை இந்த கூட்டம் உறுதிப்படுத்துவதாக உள்ளது. வங்க மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வங்கத்தின் குரலை அடக்க நினைக்கின்றனர். அந்த அந்நியர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அபிஷேக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.