தமிழகத்தில் குடியுரிமை சட்டம் வராது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு அவசர கதியில்ஓர் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது. பலவகையான மொழி, இனம், மதம், வாழ்விடசூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது. அதுமட்டுமின்றி, சிறுபான்மை சமூகத்தினர், முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானது.

இதன் காரணமாகவே, திமுக அரசு அமைந்ததும், கடந்த 2021 செப்டம்பர் 8-ம் தேதி, சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதை நிறைவேற்றி, இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். தமிழகம் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்க, மக்களை திசைதிருப்பும் நோக்கில், தேர்தல் அரசியலுக்காக இந்த சட்டத்தை மத்திய அரசு தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதோ என்று கருதவேண்டி உள்ளது. இந்த சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப்போவது இல்லை. இந்தசட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று, ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் தமிழக அரசின் கருத்து.

எனவே, மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தசட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற, தமிழக அரசு எந்த வகையிலும் இடமளிக்காது. இந்தியாவின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்துக்கும் தமிழக அரசு இடம் கொடுக்காது என்பதை தமிழக மக்களுக்கு இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.